நாகை மாவட்டம் கீழையூர் அடுத்த அச்சு கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரவேல் மகன் ஞானசேகரன் (45) இவர் கடந்த 1998ஆம் ஆண்டு எல்லை பாதுகாப்பு பணியில் பார்டர் செக்ரிடி போர்சில் பணியில் சேர்ந்தார். தற்போது மேற்கு வங்காளம் முசிராபத்தில் உள்ள 144 பட்டாலியனில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதியன்று 7:15 மணி அளவில் ஞானசேகரன் உடன் பணியாற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஜான்சன் டோபோ இருவரும் துப்பாக்கியால் சுட்டுக் சுட்டுக் கொண்டதில் ஞானசேகரன் உயிரிழந்ததாக பட்டாலியன் பணியாற்றும் சக வீரர் தஞ்சை மாவட்டம் திருவையாறு சேர்ந்த இளையராஜா என்பவர் ஞானசேகரன் மனைவிக்கு செல் போனில் தகவல் கொடுத்துள்ளார்.

 



 

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ராணுவ வீரர் மனைவி ரோஸ் கில்ட்டா இறந்த தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கும் மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தார் இந்த நிலையில்  அவரது உடல் மேற்கு வங்காளத்திலிருந்து விமானம் மூலமாக  கோயம்புத்தூர் கொண்டு வரப்பட்டு  இராணுவ வாகனம் மூலமாக  சொந்த ஊரான நாகை மாவட்டம், கீழையூருக்கு நேற்று இரவு எடுத்து வரப்பட்டது. அவரது உடல் பொதுமக்கள் மற்றும் உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் எம்எல்ஏவுமான ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

 



 

அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட இராணுவ வாகனத்தில் சோக கீதங்கள் இசைக்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஈசனூர்  கல்லறை தோட்டத்தில் இறுதி சடங்குகள் நடைபெற்றன. அப்போது எல்லை பாதுகாப்பு படை வீரருக்கு 21 குண்டுகள் முழங்க இராணுவ மரியாதை செலுத்தப்பட்டு  கிருஸ்துவ முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. நாகை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் காவல் துறை சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இறுதி சடங்கில் ஏராளமானோர் பங்கேற்றனர்.