தஞ்சாவூர்: திருச்சியில் உள்ள அமைச்சர்களின் இல்லங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் அது வெடிக்கும் என்று மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கோயில்கள், ரயில் நிலையங்கள், பஸ் ஸ்டாண்டுகளில் போலீசார் தீவிர சோதனை பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திருச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இல்லங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது வெடிக்கும் என்று இன்று காலை மிரட்டல் மின்னஞ்சல் வந்ததால் பெரும் பரபரப்பு உருவானது.
இன்று காலை திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் திருச்சியில் உள்ள நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோருடைய இல்லங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் இன்னும் சற்று நேரத்தில் அது வெடிக்கும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
தொடர்ந்து வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் தில்லைநகரில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் வீடு மற்றும் அண்ணா நகரில் உள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீடு ஆகிய இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
வீடுகளில் அமைச்சர்களின் கார்கள், வீடுகளில் மற்ற வாகனங்கள் சமையலறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டு கண்டறியும் கருவிகளைக் கொண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 2 மணிநேரத்திற்கு மேல் இந்த சோதனை நடந்தது. சோதனையில் முடிவில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவல் வதந்தி என்பது தெரியவந்தது .
வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் அனுப்பியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் சமீபகாலமாக அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் சினிமா நடிகர், நடிகைகள் இல்லங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்று வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது தொடர் கதையாக இருந்து வருகிறது.