தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடி உட்பட பல பகுதிகளில் விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் சம்பா மற்றும் தாளடி சாகுபடி மேற்கொள்வதில் விவசாயிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோடைகால சாகுபடியும் நடைபெறும். டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடிதான் முக்கியமானதாகும்.
ஒரு சில பகுதிகளில் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. மேலும் கடலை, உளுந்து, பயறு, சோளம், பூக்கள், காய்கறிகள், கிழங்குகள் போன்றவற்றையும் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். பம்ப் செட் வசதியுள்ள சில பகுதிகளில் விவசாயிகள் கோடை நெல் சாகுபடியும் மேற்கொள்வது வழக்கம்.
கரும்பு, நிலக்கடலை, உளுந்து, சோளம் என்று பயிரிடப்பட்டாலும் அதிக பரப்பளவில் நெல் சாகுபடியைதான் விவசாயிகள் மேற்கொள்கின்றனர். நெல் அதிகம் விளையும் தஞ்சை மாவட்டத்தில் தற்போது குறுவை சாகுபடி முடிந்து அறுவடைப்பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஒரு சில இடங்களில் ஒரு போக சம்பா சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு தொடர்ந்து மழை பெய்தது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. இதற்கிடையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆலக்குடி, ராயந்தூர், கல்விராயன்பேட்டை, வல்லம், சித்திரக்குடி, கள்ளப்பெரம்பூர் உட்பட சுற்றுப்பகுதிகளில் விவசாயிகள் குறுவை அறுவடையை முடித்து தற்போது சம்பா, தாளடி சாகுபடியில் வெகு மும்முரமாக உள்ளனர்.
வரப்பு, வாய்க்கால் வெட்ட, நாற்று நடவு, களை எடுப்பு என பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுகிறது. வரப்பு வாய்க்கால் வெட்ட திடகாத்திரமான ஆண் பணியாளர்கள் கிடைக்கவில்லை. களையெடுப்புக்கு பெண்கள் தேவைப்படுகின்றனர். 100 நாள் வேலை திட்டத்திற்கு பெண்கள் அனைவரும் செல்வதால் விவசாய பணிகளுக்கு வர மறுக்கின்றனர்.
அதிக கூலி தருவதாக விவசாயிகள் தெரிவித்தும் யாரும் வருவதில்லை என்று கூறப்படுகிறது. தற்போது இப்பகுதிகளில் சம்பா, தாளடி சாகுபடிக்காக விவசாயிகள் நாற்று விட்டுள்ளனர். இதனால் நாற்றுப்பறிப்பு, பாய் நாற்றங்கால், நடவுப்பணி, உரம் தெளிப்பு என்று பல்வேறு பணிகள் மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
ஆனால் ஆட்கள் பற்றாக்குறையால் ஒரு நாளில் நாற்று நட வேண்டிய பகுதிகளில் 2 நாட்கள், 3 நாட்கள் ஆகிறது. இதனால் வயலிலேயே நாற்றுக்கட்டுகள் தேங்கி கிடக்கிறது. ஒரு பகுதி முடித்து மறு பகுதிக்கு மறு நாள் ஆகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. மிஷின் நடவாக இருந்தாலும் அதற்கும் ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது என்று விவசாயிகள் தரப்பில் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
தற்போது நிறைவடைந்துள்ள குறுவை சாகுபடி இலக்கை தாண்டி நடந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் சாதனை படைத்துள்ளது. குறுவை நெல் கொள்முதலில் சில பிரச்சினைகள் இருந்தாலும் அதையும் தாண்டி தற்போது சம்பா, தாளடி சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர். இப்போது விவசாயப் பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது அவர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. நாற்று நடவு, உரம் தெளித்தல் என்று அடுத்தடுத்து பணிகள் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் விவசாயத் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதால் விவசாயிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.