தஞ்சாவூர்: ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25ம் தேதியை கருப்பு நாளாக பாஜகவினர் பொதுமக்களுக்கு நினைவுப்படுத்தி, காங்கிரஸ் கட்சியின் ஜனநாயக விரோதத்தை வெளியே எடுத்துக் கூறி வருகிறோம் என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு எம்.முருகானந்தம் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் நேற்று பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னர் நிருபர்களிடம் பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு எம்.முருகானந்தம் கூறியதாவது:
எமர்ஜென்சி அறிவித்த கருப்பு நாள்
ஜூன் 25ம் தேதி இந்திய வரலாற்றில் கருப்பு நாளாகும். இன்றைய தினத்தில் தான் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்திராகாந்தி எமர்ஜென்சியை அறிவித்தார். அப்போது பத்திரிகைகள் வெகுவாக முடக்கப்பட்டன. பத்திரிகை நிறுவனங்களுக்கு மின்சாரம் தடை செய்யப்பட்டது. இப்படி பல்வேறு விதத்திலும் பத்திரிகைகளின் சுதந்திரம் பறிக்கப்பட்டது. மேலும் எதிர்கட்சியினரும் பாதிக்கப்பட்டனர்.
கருத்து, பேச்சு சுதந்திரம்
இதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25ம் தேதியை கருப்பு நாளாக பாஜகவினர் பொதுமக்களுக்கு நினைவுப்படுத்தி, காங்கிரஸ் கட்சியின் ஜனநாயக விரோதத்தை வெளியே எடுத்துக் கூறி வருகிறோம். இப்போது எதிர்கட்சிகள் ஜனநாயகம், கருத்து சுதந்திரம் என்று வாய் கிழிய பேசுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி ஆட்சியில் எந்த இடத்திலும் ஜனநாயகத்தை மீறி செயல்படவில்லை. கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரத்துக்கு மதிப்பளித்து ஆட்சி புரிந்துள்ளார். சமூக வலைதளங்களில் பாஜகவுக்கு எதிராக மிகவும் மோசமான கருத்துகள் அதிகளவில் பகிரப்பட்டது. ஆனால் எங்கும் எந்த அடக்கு முறையும் நடைபெற்றதில்லை. அந்த அளவுக்கு நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மோடி ஆட்சி புரிந்துள்ளார். முக்கியமாக மத்திய நிதியமைச்சர் குறித்து மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் திமுக பேச்சாளர்கள் பேசினர். ஆனால் எவ்வித அடக்குமுறையும் நடக்கவில்லை. இன்று சுதந்திரம் உள்ளது. ஆனால் பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி ஜனநாயகம் பற்றி பேசுகிறது.
கள்ளக்குறிச்சி வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயத்தால் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக முதல்வர் அங்கு சென்று பொதுமக்களுக்கு ஆறுதல் கூறாமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. கள்ளக்குறிச்சி விவகாரத்தை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம் நடத்த இருந்தபோது கட்சி தொண்டர்களை போலீசார் வளைத்து, வளைத்து பிடித்தனர். ஆனால் அதிமுகவினர் போராட்டத்திற்கு மட்டும் எதுவும் செய்யவில்லை. கஞ்சா, அபின் போன்ற போதைப்பொருட்களால் இளைய சமுதாயம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. இதற்கு கடும் நடவடிக்கை வேண்டும். டாஸ்மாக் கடைகளை சிறிது சிறிதாக மூட வேண்டும்.
நீட் தேர்வு முறைகேடு குறித்து நடவடிக்கை
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக குற்றம் செய்தவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் தொடர்புடையவர்கள் அனைவரும் கட்டாயம் கைது செய்யப்பட வேண்டும். இந்த விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் விரிவாக பதில் அளித்துள்ளார். நீட் தேர்வில் முறைகேடு நடத்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகளின் அறிக்கை போல் உள்ளது
முன்னாள் நீதிபதி சந்துரு தமிழக அரசுக்கு அளித்துள்ள அறிக்கை அரசியல்வாதிகளின் அறிக்கை போல் உள்ளது. பள்ளிக் கூடங்களில் வேண்டுமானால் மாணவர்கள் கைகளில் கயிறு கட்ட கூடாது என கூறலாம், கல்வி நிறுவனங்களின் பெயர்களில் சாதி பெயர் கூடாது என்பது ஏற்கத்தக்கது அல்ல. அவரது அறிக்கை இந்து மதத்துக்கு எதிராக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின் போது தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பாஜகத் தலைவர் பி.ஜெய்சதீஷ் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.