தஞ்சாவூர்: கோயிலுக்குள் நுழையும் யாராக இருந்தாலும் தான்தான் பெரியவர் என்ற எண்ணத்தை கொண்டு இருக்கக்கூடாது. உள்ளே அவர் இருக்கிறார் என்று சொல்லாமல் சொல்லும் செய்தியை துவார பாலகர் விளக்குகிறார்
என்றும், என்றென்றும் தஞ்சை பெரிய கோயில் ஆச்சரியத்தை அதிகப்படுத்திக் கொண்டே இருக்கும். எவ்வித தொழில்நுட்பங்களும் இல்லாத காலத்தில் மிக பிரமாண்டமாக இந்த கோயிலை கட்டியது எப்படி என்ற வியப்பு அனைவருக்கும் ஏற்படும்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சோழர்களின் தலைநகரம்
தஞ்சாவூர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சோழர்களின் தலைநகரம். இங்குதான் கடைச்சோழர்கள் எனப்படும் விஜயாலயனின் வம்சத்தினர் சோழ நாட்டை ஆண்டு வந்தனர். இங்குதான் விஜயாலயன் தங்கள் குலதெய்வமான நிசும்பசூதனிக்கு ஆலயம் எடுத்து வழிபட்டார். அவரது வழித்தோன்றல்கள் பற்பல போர்களில் வெற்றி பெற்று தமிழரின் பெருமையை உலகம் முழுவதும் பறைசாற்றினர்.
மாமன்னன் ராஜராஜன் உலகமே கண்டு வியக்கும் வண்ணம் பிரமாண்டமான கோயில் கட்டி அங்கு ஓர் மாபெரும் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார். அத்தகைய பெருமை பெற்ற தஞ்சாவூரும், வானளாவ எழுந்து நிற்கும் இராஜராஜேச்சரம் எனப்படும் பிரஹதீஸ்வரருக்கான பெரிய கோயிலும் ஒவ்வொரு பகுதியிலும் ஆச்சரியங்களையும் அதிசயங்களை கொண்டுள்ளது என்றால் மிகையில்லை.
தெளிவான திறமையும், ஆன்மீக அறிவும் கொண்ட நம் முன்னோர்
தஞ்சாவூர் பெரிய கோயிலின் ராஜராஜன் கோபுரத்திலும், மகாமண்டபத்தின் வாயிலிலும் உள்ள துவாரபாலகர் சிற்பங்கள் பார்க்கப் பார்க்க பிரமிப்பை ஊட்டுபவை. அப்படி என்னங்க இருக்கு துவார பாலகர்கள் சிற்பங்களில் என்று எளிதாக கேள்வி வந்து விடும். ஆனால் அதற்கான பதிலில் தான் உள்ளது நமது முன்னோர்களின் தெளிவாக திறமையும், ஆன்மீக அறிவும்.
பாம்பு யானையை விழுங்கும் சிற்பம்
இந்த துவாரபாலகர்களின் சிற்பங்களின் காலடியில் ஒரு பாம்பு யானையை விழுங்கும் சிற்பம் உள்ளது. துவாரபாலகரோ ஒரு கரத்தை கதையின் மீது வைத்து ஒரு கரத்தால் தர்ஜனி என்னும் எச்சரிக்கை முத்திரை காட்டி, மேலிரு கரங்களில் ஒன்றில் ஈசன் இருக்கும் திசையைக் காட்டுவதுடன், மறுகரத்தை தலைக்குமேல் உயர்த்தி பெருவியப்பைச் சுட்டிடும் விஸ்மயம் எனும் முத்திரையைக் காட்டுகிறார்.
இச்சிற்பத்துக்கு முன் நின்றுகொண்டு அங்குக் காணும் யானையை உண்மையான யானையின் அளவாகக் கொண்டு அதே விதிதத்தில் அச்சிற்பத்தை நோக்குவோமாயின் துவாரபாலகரோ வானத்தளவு நம் கற்பனையில் தோன்றுவார் என்பதும் மிகையில்லை. அவர் மானத்தின் உள்ளே ஈசனைச் சுட்டி விஸ்மயம் எனும் பெருவியப்பைக் காட்டும்போது அங்கே பிரபஞ்சமே ஈசனாக இருப்பதை உணரலாம்.
அனைத்துக்கும் பெரியவர் ஈசன்
அதாவது யானை எவ்வளவு பெரிய விலங்கு. அதை விழுங்கும் பாம்பு அதைவிட எத்தனை பெரியதாக இருக்க வேண்டும். அவற்றை காலடியில் கொண்டு மிக பிரமாண்டமாக நிற்கும் துவாரபாலகர் எத்தனை பெரியவராக இருக்க வேண்டும். அவரோ அனைத்துக்கும் பெரியவர் ஈசன் என்று அவர் இருக்கும் திசையைக் காட்டுவதுடன், மறுகரத்தை தலைக்குமேல் உயர்த்தி பெருவியப்பைச் சுட்டிடும் விஸ்மயம் எனும் முத்திரையைக் காட்டுகிறார். இதனால் யாரும் யாரை விடவும் பெரியவர்கள் இல்லை. அதற்கு மேல் உள்ள பிரமாண்ட சக்தி ஈசன் என்று தெரிவிக்கிறார் துவாரபாலகர்.
தான்தான் பெரியவர் என்ற எண்ணம் இருக்கக்கூடாது
கோயிலுக்குள் நுழையும் யாராக இருந்தாலும் தான்தான் பெரியவர் என்ற எண்ணத்தை கொண்டு இருக்கக்கூடாது. உள்ளே அவர் இருக்கிறார் என்று சொல்லாமல் சொல்லும் செய்தியை துவார பாலகர் விளக்குகிறார். இப்படி நுட்பமாக நம் முன்னோர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் நுணுக்கமான அறிவை பெற்றிருந்ததை உணரலாம்.