தஞ்சாவூர் தெற்கு, வடக்கு மாவட்ட பாஜகவின் இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு அணி, அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு  மனித சங்கிலி போராட்டம் தஞ்சாவூர் ரயிலடி முதல் ஆத்துப்பாலம் வரை நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர்கள் பண்ணவயல் இளங்கோவன், சதீஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் ஜெய்சதீஷ் முன்னிலை வகித்தார். இதில் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.போராட்டத்தில், தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலைக்கான மாநில வரியை குறைக்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதலை துரிதப்படுத்த வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மாநில அரசு உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.




நிர்வாகிகள் பேசுகையில்,திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்கப்படும் என்று அறிவித்திருந்தனர்.  ஆனால் கண்துடைப்பிற்காக பெயரளவிற்கு மட்டும் குறைத்து விட்டு, அப்படியே விட்டு விட்டனர். தமிழகத்தை ஆளும் திமுக அரசு, பெட்ரோல், டீசலுக்கான மாநில வரியை குறைத்தாலே போதும், பெட்ரோல் டீசல் விலை குறையும். ஆனால் தமிழக அரசு குறைக்க வில்லை.  இதனால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதே போல் டெல்டா மாவட்டங்களில் நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் கீழ் இயங்கும் நெல் கொள் முதல்  நிலையங்களில், விவசாயிகளிடமிருந்து கொள் முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை மழையில் நனைந்து நாற்றுக்கள் முளைத்துள்ளது. இதனால் கொள் முதல் செய்த நெல் மூட்டைகளில் உள்ள நெல் மணிகள் பதறாகி விடும். இது குறித்து தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை. விவசாயிகள் கஷ்டப்பட்டு விளைவித்த நெல் மணிகளை தமிழக அரசு அலட்சியம் காட்டுவது வேடிக்கையாக உள்ளது.




தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால், பல ஆயிரம் ஏக்கர் மழையினால் சம்பா தாளடி பயிர்கள் நாசமாகி விட்டது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடன்களை வாங்கியும், நகைகளை அடமானம் வைத்து விவசாயம் செய்துள்ள விவசாயிகளுக்கு,  தமிழக அரசு, சம்பா தாளடி நெற்பயிர்கள் பாதித்ததை கணக்கெடுத்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தொடர் மழையினால் வீடுகள், கால்நடைகள்  சேதம் குறித்து, அவர்கள் பாதிக்காதவகையில் இழப்பீடு வழங்க வேண்டும். பெட்ரோல் டீசல்லின் மாநில வரியை குறைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று பேசினா்.