மழையால் சேதமடைந்த குறுவை நெற்பயிர்ளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி பணிகளில் தீவிரமாக விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் எந்த ஆண்டு இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் கடந்த ஒரு மாத காலமாக பருவம் தப்பி பெய்த மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து தற்பொழுது அறுவடை நேரத்தில் மழை பெய்து சாகுபடி பணிகளை முழுவதுமாக பாதித்துள்ளதால் செய்த செலவு தொகையை கூட எடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மழையால் சேதம் அடைந்த குறுவை நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அதன் மாநில செயலாளர் மாசிலாமணி கூறியதாவது, நடப்பாண்டில் வரலாற்றில் இல்லாத வகையில் முன்கூட்டியே மே மாதம் 24 ஆம் தேதி தமிழக முதல்வர் டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறந்து வைத்தார். இதனையடுத்து விவசாயிகள் மும்முரமாக சாகுபடி பணியில் ஈடுபட்ட நிலையில் கூடுதல் பரப்பளவிலும் சாகுபடி நடைபெற்று உள்ளது. அதன்படி நடைபெற்ற சாகுபடி தற்போது நெல் பயிர்கள் கதிர் வந்த நிலையிலும் அறுவடைக்கு தயாரான நிலையிலும் இருந்து வருகின்றன. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை மற்றும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக இந்த குறுவைப் பயிர்கள் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளன. அதன்படி பல்வேறு இடங்களில் பயிர்கள் சாய்ந்தும் அழுகியும் முளைத்தும் இருந்து வருகின்றன. மேலும் குறுவை பயிர்களுக்கான காப்பீடு அமல்படுத்தாத நிலையில் தற்போது இதுபோன்று ஏற்பட்டுள்ள பாதிப்புகளை உரிய கணக்கெடுப்பு நடத்தி நெற்பயிர் ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 42,000 பருத்தி பாதிப்புக்கு உரிய அளவு நிவாரணம் வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் உடனடியாக மாவட்ட ஆட்சியர் உத்தரவின் அடிப்படையில் வருவாய்த்துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட வேண்டும் மேலும் வருவாய்த்துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் எடுத்த கணக்கெடுப்பை மாவட்ட ஆட்சியர் தமிழக முதல்வருக்கு அனுப்பி வைத்து விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பயிர் காப்பீடு இல்லாத நிலையில் விவசாயிகளுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் நிவாரணம் மட்டுமே அடுத்த கட்ட சாகுபடி பணிகளை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் ஆகவே தமிழக முதல்வர் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 42 ஆயிரம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.