நல்லாசிரியர் விருது தொடர்ந்து பெறுகின்ற மன்னார்குடியை சேர்ந்த ஆசிரியர் குடும்பம்.

 

தமிழக அரசின் கல்வித்துறைக்கான உயரிய விருதாக கருதப்படும் நல்லாசிரியர் விருது ஆண்டுதோறும் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான ஆசிரியர் தினத்தில் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒரு ஆசிரியர் மாணவர்களிடத்தில் நடந்துகொள்ளும் விதம், மற்றும் மாணவர்களுக்கு பாடத்திட்டத்தினை கொண்டு செல்லும் முறை, பொதுமுடக்க காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசிரியர் என்ற முறையில் செய்த உதவிகள், மேலும் கொரோனா பொதுமுடக்கதையும் பொருட்படுத்தாமல் மாணவர்களுக்காக பணியாற்றிய விபரம் உள்ளிட்டவைகள் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு அதன் மூலம் இந்த ஆண்டு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இந்த ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் 9 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் கேடயம் மற்றும் 10,000 காசோலை மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டன.



 

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி செட்டி தெருவை சேர்ந்த தலைமை ஆசிரியர் பிரேம்குமார் அவர்களுக்கு இந்த ஆண்டிற்கான தமிழக அரசின் மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் மன்னார்குடி அருகே துளசேந்திரபுரம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ஆசிரியர் பிரேம்குமார் அவர்களின் குடும்பம் ஓர் ஆசிரியர் குடும்பமாகும். இவரது சகோதரர் செல்வராஜன் மன்னார்குடி அருகே உள்ள 55 மரக்காடு கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் மாநில நல்லாசிரியர் விருதை கடந்த 2011 ஆம் ஆண்டு பெற்றுள்ளார்.

 

இதேபோல் இவர்களின் தந்தை ஜெகதீசன் கூத்தாநல்லூரில் உள்ள மன் உள் உலா தனியார் நடுநிலைப்பள்ளியில் 25 ஆண்டுகள் தலைமை ஆசிரியராக பணியாற்றி கடந்த 1987 ஆம் ஆண்டு தமிழக அரசின் நல்லாசிரியர் விருதை பெற்றார். பின்னர் 1994 ஆம் ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதையும் பெற்றுள்ளார் நல்லாசிரியர் பிரேம் குமார் அவர்களின் தந்தை ஜெகதீசன். ஆசிரியர் பிரேம்குமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர் பணி செய்துவரும் நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு விக்கிரபாண்டியம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் இருந்து துள சேந்திரபுரம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்கு மாறுதலாகி பணிபுரிந்து வருகிறார். கடந்த 9 ஆண்டுகளில் 8 ஆண்டுகள் இப்பள்ளியில் பயின்ற 10 ஆம் வகுப்பு மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது.



 

கடந்த 2015 ஆம் ஆண்டு சிறந்த பள்ளிக்கான காமராஜர் விருதும் பெற்றுள்ளது துளசேந்திரபுரம் அரசு நடுநிலைப்பள்ளி. இப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களே தான் இன்று நான் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற காரணம் என தெரிவித்துள்ளார் ஆசிரியர் பிரேம்குமார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு மகன்கள் தேசிய மற்றும் மாநில அளவில் நல்லாசிரியர் விருது பெற்றிருப்பது அந்த குடும்பத்திற்கு மட்டுமின்றி அப்பகுதி மக்களுக்கும் மன்னார்குடி பகுதி மக்களுக்கும் பெருமை அளிக்கும் ஒன்றாக உள்ளது.