தென்னாப்பிரிக்காவில், பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே நடைபெற்ற பீச் வாலிபால் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று நாடு திரும்பிய வீரர்களுக்கு சொந்த ஊரான நாகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேளதாளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட வீரர்களுக்கு ஆரத்தி எடுத்து ஊர் மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.



 

பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான பீச் வாலிபால் போட்டிகள் கடந்த 18 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் துவங்கியது. நான்கு நாட்கள் நடைபெற்று வந்த பீச் வாலிபால் போட்டியில், இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட ஐந்து நாடுகளை சேர்ந்த 30 அணிகள் பங்கேற்றன. இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து நாகை மாவட்டம் நம்பியார் நகர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த அபிதன் மற்றும் தஞ்சை நெடுவாக்கோட்டையைச் சேர்ந்த பூந்தமிழன் ஆகியோர் விளையாடினர். இறுதிப்போட்டியில் ரஷ்யாவிடம் மோதிய இந்திய அணியினர் 21-15, 21-10 என இரண்டு செட் நேர் கணக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றனர். வெள்ளி பதக்கம் வென்று இன்று நாடு திரும்பிய வீரர்களுக்கு சொந்த ஊரான நாகையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் தலைமையில் குவிந்த ஊர் மக்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள், அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். நாகை பேருந்து நிலையத்தில் இருந்து நம்பியார்நகர் மீனவ கிராமம் வரை மேளதாளம் முழங்க ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட பீச் வாலிபால் வீரர்களான அபிதன், பூந்தமிழன் ஆகியோருக்கு உறவினர்களும், பெண்களும் பொன்னாடை அணிவித்து, ஆரத்தி எடுத்து, கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.



 

உயரம் குறைவாக இருந்த தங்களுக்கு தென்னாப்பிரிக்கா விளையாட்டு ரசிகர்கள் உற்சாகப்படுத்தி வெள்ளி பதக்கம் வெல்ல உறுதுணையாக இருந்தனர் எனக்கூறிய பீச் வாலிபால் வீரர்கள், தங்கப் பதக்கத்தை நோக்கிய தங்களது இலக்கு தவறிவிட்டதால், வரும் காலங்களில் ஆசிய மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்திட கடும் பயிற்சி எடுக்க போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அதற்கு தமிழக அரசு ஊக்கத்தொகை வழங்கி தங்களை ஊக்குவிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.