கும்பகோணத்தில் ரயில் நிலையத்தில் ஊனமுற்றோர், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களின் நடைமேடை பயன்பாட்டிற்காக நான்கு பேர் பயணம் செய்யும் அளவில் புதிய பேட்டரி கார் கும்பகோணம் ரயில் நிலையத்தில் ஊனமுற்றோர், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களின்  நடைமேடை பயன்பாட்டிற்காக நான்கு பேர் பயணம் செய்யும் அளவில் பேட்டரி கார் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. கும்பகோணத்தில் உள்ள ரயில் நிலையத்தில் தினந்தோறும் 1000 க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனா். 




இங்கு பெங்களூர், மைசூர் உள்ளிட்ட வெளி மாநிலம் மற்றும் அனைத்து வெளி மாவட்டத்திலிருந்து ரயில்கள் வருகின்றது. மேலும் கும்பகோணத்தை சுற்றிலும் கோயில்கள், நவக்கிரஹ கோயில்கள், புராதன கோயில்கள் உள்ளதால் அனைத்து தரப்பு மக்களும் இங்கு வந்து செல்வார்கள். தற்போது ஒரு சில ரயில்கள் வந்து செல்லும் நிலையில், வரும் அனைத்து ரயில்களிலும் ஏராளமான பயணிகள் கும்பகோணத்திற்கு வருகிறார்கள். கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று காரணமாக ரயில்கள் நிறுத்தப்பட்டன. இதே போல் அனைத்து கோயில்கள் மற்றும் வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன.பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன் ரயில் சேவை தொடங்கியதால். கும்பகோணம் மற்றும் சுற்றுபுறங்களில் உள்ள கோயில்களுக்கு வரும் வெளி மாவட்ட, மாநில பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது.


இதில் பெரும்பாலோனார் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி தாய்மார்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்துவதற்காக அதிக அளவில் வருவதால், பேட்டரி கார் சேவை தொடங்க கோட்ட ரயில்வே உபயோகிப்பாளர் குழு கூட்டத்தில் அன்மையில், கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்று ரயில்வே நிர்வாகம், பேட்டரி கார் சேவையை தொடங்கியுள்ளது. கும்பகோணத்திலிருந்து வெளியூர் செல்லும் அல்லது வெளியூரில் இருந்து கும்பகோணம் இறங்கும் பயணிகளில் பலர் வயது முதிர்ந்தோராகவும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களாகவும் வந்து செல்கின்றனர். இவர்களின் வசதிக்காக ரயிலில் ஏறவும், இறங்கவும் நடைமேடையில் நடந்து செல்ல வேண்டும் என்ற காரணத்தால், அவர்கள் சுலபமாக சென்று வரும் வகையில், ஷட்டில் கார்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் தாமாக முன்வந்து ஐந்து வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 4 லட்சம் மதிப்புள்ள பேட்டரி கார் ஒன்றை கும்பகோணம் மக்களின் பயன்பாட்டிற்கு இலவசமாக வழங்கியுள்ளது.




இந்த வாகனத்தில் ஓட்டுனரை சேர்த்து நான்கு பேர் பயணம் செய்யலாம். 24 மணி நேரமும் பயணிகளின் பயன்பாட்டிற்கு உள்ள இந்த வாகனத்திற்கு அந்த தனியார் நிறுவனம்சார்பாக சுழற்சி முறையில் மூன்று ஓட்டுநர்கள் பணி அமர்த்தியுள்ளனர். மேலும், 48 வோல்ட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ள இந்த வாகனத்தை ஐந்து மணி நேரம் சார்ஜ் செய்தால் ஒரு நாள் முழுதும் பயன்படுத்தலாம். இந்த பேட்டரி கார் சேவைக்கு கும்பகோணம் மக்கள் பெரிதும் வரவேற்பு அளித்துள்ளனர். மேலும், இந்த சேவைக்கு அனுமதியளித்த முதுநிலை கோட்ட வணிக மேலாளருக்கு தஞ்சாவூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.