வேளாங்கண்ணி திருவிழாவின் போது கடலில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ரு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா வரும் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. திருவிழா முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், மாவட்ட வருவாய் அலுவலர் சகிலா, கோட்டாட்சியர் முருகேசன், பேரூராட்சி தலைவர் சர்மிளா டயானா பேரூராட்சி செயலாளர் பொன்னுசாமி  மற்றும் வருவாய்த்துறை  தீயணைப்பு துறை காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 


 



 

 

அதனைத் தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் , ஹோட்டல்கள் தங்கும் விடுதிகள் ஆட்டோக்களில் கட்டணம்  வரையறை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து இடங்களிலும் சிசிடிவி கண்காணிப்பை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் என்று தெரிவித்த அவர்,  வேளாங்கண்ணி கடற்கரையில் அசம்பாவிதங்களை தடுப்பதற்கு  பொதுமக்கள் குளிக்க அனுமதி இல்லை எனவும் தெரிவித்தார். மேலும் விடுதிகளில் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது, பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் உபயோகிக்க வேண்டும்,  வெளிநாட்டு நபர் தங்கினால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அனைத்து முன்னேற்பாடுகளும் 14ஆம் தேதிக்குள் தயார் நிலையில் வைத்திருக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.