தஞ்சாவூரில் மாமன்னன் ராஜராஜசோழனின் 1037-வது ஆண்டு சதயவிழாவை ஒட்டி வரும் இன்று தகாலை பந்தக்கால் முகூர்த்தம் நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் இன்றளவும் அனைத்து தரப்பு மக்களை ஆச்சரியப்பட வைத்து வருகிறது. கட்டிடக்கலை, சிற்பங்களின் அழகு, உயர்ந்து நிற்கும் கோபுரம், தரையில் நிழல் விழாத நிலை என்று பெரிய கோயில் புகழ் பெற்று விளங்குகிறது. இக்கோயிலுக்கு பிற மாவட்டங்கள், மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள், பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். இந்த கோவிலின் கட்டிடம் கருங்கற்களால், 216 அடி உயரத்துக்கு கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் கோபுரத்தில், கலச வடிவிலான மேற்கூரை, 80 டன்னில், ஒற்றை கல்லால் செய்யப்பட்டது. இது தமிழர் கட்டடக்கலையை உலகறிய செய்த கோவில் ஆகும்.


1987ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ எனப்படும் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால், உலகப் பாரம்பரியச் சின்னமாக, தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் அறிவிக்கப்பட்டது. உலக புகழ் பெற்ற இந்த கோவிலை காண, உலகம் முழுவதில் இருந்தும், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் மட்டுமின்றி கட்டிடகலை நிபுணர்களும் தமிழகத்திற்கு வந்து செல்கின்றனர்.


இத்தகைய பெருமைமிகு பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் பிறந்த ஐப்பசி சதய நட்சத்திரம் வரும் நவ.3-ம் தேதி வருவதால்,  அவரது 1037-வது ஆண்டு சதய விழா அன்றைய தினம் நடைபெறவுள்ளது. ராஜராஜசோழனின் சதய விழாவை முன்னிட்டு வரும் நவ.2-ம் தேதி பெரிய கோயில் வளாகத்தில் கவியரங்கம், கருத்தரங்கம், ஆன்மிக சொற்பொழிவு, பரிசளிப்பு விழா ஆகியவை நடைபெறவுள்ளது.


தொடர்ந்து நவ.3ம் தேதி காலை தேவார நூலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, ஓதுவார்களின் வீதிவுலா நடைபெறுகிறது. பின்னர் பெரிய கோயிலுக்கு வெளியே உள்ள மாமன்னன் ராஜராஜசோழனின் சிலைக்கு கோயில் நிர்வாகம், மாவட்டம் நிர்வாகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.




தொடர்ந்து ராஜராஜசோழன், உலோகமாதேவி ஐம்பொன் சிலைகள் முன்பாக புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து சிவச்சாரியர்கள் சிறப்பு யாகம் நடத்தி, பின்னர் பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவியப்பொடி உள்ளிட்ட மங்கள பொருட்களால் பேரபிஷேகமும், மகா தீபாராதனையும் நடத்தவுள்ளனர். நவ.3-ம் தேதி இரவு ராஜராஜசோழன் மற்றும் உலோகமாதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வீதிவுலா நடைபெறவுள்ளது.


இந்த விழாவையொட்டி இன்று காலை 10.30 மணிக்கு தஞ்சாவூர் பெரிய கோயில் வளாகத்தில் விழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் நடைபெறவுள்ளது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.