தஞ்சை மாவட்டம் திருவையாறு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி வாழைத்தார் அறுவடைப்பணி மும்முரம் அடைந்து வருகிறது.


நமது கலாசாரத்தில் பெரும்பாலும் எந்த ஒரு நல்ல செயலையும் தை மாதத்தில் ஆரம்பிப்பது என்பது பழங்காலத்தில் இருந்து வரும் வழக்கம் ஆகும். தை மாதத்தில் தான் சூரியன் வட அரைக்கோளப் பகுதியில் பயணத்தை ஆரம்பிக்கும் உத்திராண்ய காலம் ஆரம்பமாகிறது. ஆடி மாதத்தில் விதைத்த நெல் தை மாதத்தில் தான் அறுவடை செய்யப்பட்டு இயற்கைக்கும், சூரியனுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.



தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல், திருவள்ளுவர் தினம் என்று தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. விவசாயிகள் பொங்கல் பண்டிகை அன்று புத்தாடை அணிந்து புதுப்பானையில் பொங்கலிட்டு கொண்டாடுவார்கள். இந்த பொங்கல் பண்டிகையில் முக்கிய இடத்தை பிடித்து இருப்பது கரும்பு, மஞ்சள் கொத்து, வாழைப்பழம் தான்.



இதற்காக வாழைத்தார் அறுவடை பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக செய்யப்படும். அந்த வகையில் தஞ்சை மாவட்டம் திருவையாறு, வடுகக்குடி, ஆச்சனூர், சாத்தனூர், நடுக்காவேரி, திருப்பூந்துருத்தி உட்பட காவிரி டெல்டாவின் படுகை பகுதிகளில் வாழை சாகுபடி நடந்து வருகிறது. அந்த வகையில் இப்பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் அளவிற்கு வாழைத்தார் சாகுபடி நடந்துள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு முக்கியமானது பூவன் ரகம்தான். இதுதான் தற்போது இப்பகுதிகளில் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையின்போது புதுமணத்தம்பதிகளுக்கு சீர் வரிசையாக பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்கள், கரும்பு, மஞ்சள் கொத்து, வாழைத்தார் போன்றவைகளை கொடுப்பார்கள். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் தஞ்சை மாவட்டம் உட்பட பல மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் திருவையாறு பகுதியில் குவிந்துள்ளனர்.





தற்போது வாழைத்தார் விற்பனையும் அதிகரிக்க தொடங்கி விட்டது. பூவன் ரக வாழைத்தார் ஒன்று ரூ.400 முதல் ரூ.450 வரை விலைக்கு போகிறது. கடந்தாண்டை விட ஒரு மடங்கு விலை அதிகம் செல்கிறது. அதாவது கடந்த ஆண்டு ஒரு பூவன் ரக தாரின் விலை ரூ.250 வரைதான் விற்பனையானது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு விலை உயர்ந்து அதிக விற்பனையாவதால் வாழை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளது.

இதுகுறித்து திருவையாறு அருகே வடுகக்குடியை சேர்ந்த வாழை விவசாயி மதியழகன் கூறுகையில்,  பொங்கல் பண்டிகை என்றால் பூவன் ரக வாழைப்பழம்தான் முக்கிய இடம் பெறும். அந்த வகையில் திருவையாறு உட்பட சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவில் பூவன் ரகம்தான் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது வாழைத்தார் அறுவடை நடந்து வருகிறது.

இங்கிருந்து தஞ்சாவூர், மாயவரம், சிதம்பரம், சீர்காழி, திருச்சி, குளித்தலை, தேனி, மோகனூர் என்று பல பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழையால் வாழை சாகுபடி பாதிக்கப்பட்டது. இருப்பினும் தற்போது அமோகமாக அதிக விலைக்கு விற்பனை ஆவதால் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.