தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சாரங்கபாணி கோயிலுக்கு சொந்தமான பொற்றாமரை குளத்தில் படர்ந்தள்ள பாசிகளை அகற்றி தண்ணீர் நிரப்ப வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் மாநகரில் ஏராளமான கோவில்கள் அமைந்துள்ளன. இதனால் கும்பகோணம் கோவில் நகரம் என்று அழைக்கப்படுகிறது. சாரங்கபாணி சாமி கோவில், கும்பகோணம் மாநகரின் மையப்பகுதியில் அமைந்து உள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்து சிறப்பு வாய்ந்த வைணவ தலமாக இந்த கோவில் போற்றப்படுகிறது.
இந்த கோவிலுக்கு சொந்தமான பொற்றாமரை குளம் கோவிலுக்கு பின்புறம் உள்ளது. மகாமக குளத்தை அடுத்து பிரசித்தி பெற்ற குளமாக இது திகழ்கிறது. பிரளய காலத்தில் அமிர்தம் விழுந்த இடமாக கும்பகோணம் மகாமக குளமும், பொற்றாமரை குளமும் திகழ்கின்றன
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமக திருவிழாவுடன் இந்த பொற்றாமரை குளம் தொடர்புடையது. அதாவது மகாமக திருவிழாவையொட்டி லட்சக்கணக்கான மக்கள் கும்பகோணம் மாநகருக்கு வந்து கங்கை, காவிரி, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதை, கிருஷ்ணா, சிந்து, சரயு முதலிய 9 புண்ணிய நதிகளும் ஒன்றுகூடும் மகாமக குளத்தில் நீராடுவார்கள்.
அதன் பின்னர் பொற்றாமரை குளத்தில் நீராடிவிட்டு பிறகு காவிரியிலும் நீராடுவார்கள். சாரங்கபாணி கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெறும். கும்பகோணத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பொற்றாமரை குளத்தை பார்க்காமல் செல்லமாட்டார்கள். இவ்வாறு சிறப்பு வாய்ந்த பொற்றாமரை குளத்தின் தற்போதைய நிலையோ மிகவும் மோசமாக உள்ளதால் பக்தர்களின் மனதில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
குளத்திற்கு காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் வரும் பாதைகள் பல்வேறு ஆக்கிரமிப்புகளால் அடைபட்டு போய் விட்டன. இதனால் குளத்தில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்பட்டது. திருவிழா நாட்களில் நிகழ்ச்சிகள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. தற்போது குளத்தில் உள்ள மழைநீரில் பாசிகள் படர்ந்துள்ளது. முறையாக பராமரிக்கப்படாததால் குளத்தின் படிக்கட்டுகளில் செடிகள் வளர்ந்து காணப்படுகின்றன.
குளத்தின் மையப்பகுதியில் உள்ள மண்டபத்தின் மேல்பகுதியிலும் செடிகள் வளர்ந்துள்ளது. இதனால் மண்டபத்தில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எம்எல்ஏ அன்பழகன் ரூ.20 லட்சம் மதிப்பில் மின்மோட்டார் அமைத்து தண்ணீர் நிரப்ப ஏற்பாடு செய்தார். ஆனால் பொற்றாமரை குளத்தில் தண்ணீர் நிரப்ப எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொற்றாமரை குளத்தில் படர்ந்துள்ள பாசிகளை அகற்றி தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மிகவும் பிரசித்தி பெற்ற பொற்றாமரை குளம் தற்போது பாசிக்குளமாக மாறி வருகிறது. இது குறித்து உடன் நடவடிக்கை எடுக்காவிடில் இந்த குளம் குப்பைகள் கொட்டும் குளமாகவும் தண்ணீரில் அதிகளவில் பாசி படர்ந்து துர்நாற்றமும் வீசக்கூடும். எனவே இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.