திருவாரூர் மாவட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டில் 8 லட்சத்து 36 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட 40 ஆயிரம் மெட்ரிக் டன் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வு பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

 


திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குருவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 130 ஏக்கர் பரப்பளவில் குருவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தற்பொழுது ஈடுபட்டு வருகின்றனர். இதில் நேரடி விதைப்பில் 62,000 ஏக்கர் பரப்பளவிலும் நடவுப் பணிகளில் ஒரு லட்சத்து ஆயிரத்து 130 ஏக்கர் பரப்பளவிலும் விவசாயிகள் தற்பொழுது தங்களது நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தை பொருத்தவரை 80 ஆயிரம் ஏக்கர் ஆற்று நீர் பாசனத்தை நம்பியும் 93 ஆயிரம் ஏக்கர் ஆழ்துளை கிணறுகளை நம்பியும் தற்பொழுது நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனயர். இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வரும் நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் குருவை நெல் சாகுபடிகள் தண்ணீரில் இல்லாமல் கருகி வருகிறது இந்த நிலையில் ஒரு நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்தால் மட்டுமே குருவை நெல் சாகுபடிகளை முழுமையாக பாதுகாக்க முடியும் மேலும் சம்பா சாகுபடி பணிகளை தொடங்க முடியும் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 




 

இந்த நிலையில் தமிழக முழுவதும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் ஒன்றாம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை ஒரு காரீப் வருடமாக செயல்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சம்பா கோடை நெல் சாகுபடி என மூன்று போகம் விவசாயிகள் சாகுபடி செய்த நெல்லை அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.



 

அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டில் 522 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மாவட்டம் முழுவதும் திறக்கப்பட்டு 8 லட்சத்து 36 ஆயிரத்து 445 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கடந்த 2021-22 ஆம் ஆண்டில் 7 லட்சத்து 96 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 40 ஆயிரம் மெ.டன் கூடுதலாக இந்த ஆண்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் முதுநிலை மண்டல மேலாளர் ராஜ ராஜன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டு பல்வேறு இயற்கை சிற்றங்களுக்கு இடையில் விவசாயிகள் அறுவடை பணிகளை மேற்கொண்ட நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் அறுவடை செய்த நெல் மணிகள் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பதாக ராஜராஜன் தெரிவித்துள்ளார் மேலும் நாளை முதல் 2023-24 ஆம் ஆண்டிற்கான நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் எனவும் ராஜராஜன் தெரிவித்துள்ளார்.