தஞ்சாவூரில் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பெண் குழந்தையை பட்டுக்கோட்டையில் போலீசார் மீட்டனர். தஞ்சாவூர், பர்மாகாலனியை சேர்ந்தவர் குணசேகரன் (24) டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி (22).  இவர்களுக்கு கடந்த ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ராஜலட்சுமிக்கு கடந்த 5 நாட்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை குடும்பத்தினர் தஞ்சாவூர் ராசா மிராசுதாரர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அன்றைய தினம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.


இந்நிலையில் ராஜலட்சுமி குழந்தை பிரசவத்திற்காக மாடியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ராஜலெட்சுமி-குணசேகரன் இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள், உறவினர்கள் அதிகமாக வரமாட்டார்கள் என்று தெரிந்து கொண்டு, அதே வார்டில் இருந்த ஒரு பெண் ஒருவர், ராஜலெட்மிக்கு, உன் அம்மா போல் நினைத்துக்கொள், நான் பார்த்துக்கொள்கிறேன் என கூறி உதவி செய்து வந்துள்ளார். இதனை நம்பி, கடந்த 4 நாட்களாகவே ராஜலட்சுமி, சில உதவிகளை கேட்டதால், முகம் சுளிக்காமல் அப்பெண் செய்து வந்துள்ளார். அதன் பிறகு அந்த பெண் மீது ராஜலட்சுமி நம்பிக்கை வைத்திருந்தார்.


காலை அந்த பெண் ராஜலட்சுமியிடம் நீங்கள் குளித்து விட்டு வாருங்கள், நான் கைக்குழந்தையை ஜாக்கிரதையாக பார்த்து கொள்கிறேன் என்றும், விரைவில் வந்து விடு என்ற கூறி அனுப்பியுள்ளார். தாய் போல் பார்த்துக்கொள்கின்றாரே என்று நம்பிக்கையுடன்  ராஜலட்சுமி, குழந்தையை, அப்பெண்ணின் கையில் கொடுத்து விட்டு குளிக்க சென்றார்.


ராஜலெட்சுமி, சென்றவுடன், சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு, அப்பெண் பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளங் பெண் கைக்குழந்தையை கட்டைபையில் வைத்து, சந்தேகம் ஏற்படாத வகையில், குழந்தைய கடத்தி கொண்டு வேகமாக நடந்து  சென்றார்.


இதற்கிடையே குளிக்க சென்று விட்டு வார்டுக்குள் வந்த ராஜலட்சுமி தனது குழந்தையும் உதவிக்கு வந்த பெண்ணும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து, கணவர் குணசேகரனுக்கு தகவல் கொடுத்தார்.




இதுகுறித்து தஞ்சாவூர்  மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். புகாரின் பேரில் தஞ்சாவூர் எஸ்பி ரவளிப்பிரியாகாந்தபுனேனி உத்தரவின் பேரில், மூன்று தனிப்படை அமைக்கப்பட்டது.


இந்நிலையில் பட்டுக்கோட்டையில் அப்பெண் இருப்பதாக வந்த தகவலையடுத்து, போலீசார் அப்பெண்ணை  இரண்டு பிரிவின் கீழ் கைது செய்து, குழந்தையை பத்திரமாக மீ்ட்டு, எஸ்பி ரவளிப்பிரியாகாந்தபுனேனி, தாய் ராஜலெட்சுமியிடம் ஒப்படைத்தார். அப்போது, தாய் ராஜலெட்சுமி, இரண்டு நாட்களாக காணாமல் சென்ற பெண் குழந்தை கிடைத்ததையடுத்து குழந்தையை தூக்கி உச்சி முகர்ந்து, முத்தங்களை வழங்கி, ஆனந்த கண்ணீருடன் போலீசாருக்கு நன்றியை தெரிவித்தார். அப்போது வார்டில் இருந்த அனைவரும், எஸ்பி மற்றும் போலீசாரை பாராட்டும் விதமாக கைதட்டி, ஆராவாரத்துடன் வாழ்த்த தெரிவித்தனர். அவருடன் ஏடிஎஸ்பி ரவீந்திரன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.


இது குறித்து எஸ்.பி ரவளிப்பிரியா காந்தபுனேனி நிருபர்களிடம் கூறுகையில், “கைக்குழந்தையை கடத்தியதாக வந்த தகவலையடுத்து, அங்குள்ள சிடிடிவி கேமரா கண்காணிக்கப்பட்டது. அதில் குழந்தையை கடத்திய பெண் பச்சை கலர் கட்டப்பையில் குழந்தையை கடத்திக்கொண்டு, சாலையை கடந்து, ஆட்டோவில் ஏறி சென்றார். ஆனால் சிசிடிவி கேமரா தெளிவாக இல்லாததால், அவர் யார் என்று தெரியவில்லை. அதன் பின்னர், அங்குள்ள மெடிக்கல் ஷாப்பில், குழந்தை பிறந்த அன்று, பேம்ப்பர்ஸ் வாங்குவதற்காக வந்துள்ளார். அப்போது கடைகாரர், 10 பீஸ் பேம்ப்பர்ஸ் ரூ. 75 க்கு வாங்கினால், கூப்பன் வழங்கப்படும், அதில் பரிசு விழுந்தால், வழங்கப்படும் என்று கூறியதால், கூப்பனில், அப்பெண், செல்போன் நம்பரை எழுதி கொடுத்துள்ளார்.


போலீசார், இது போன்ற அடையாளம் கொண்ட பெண்ணை பற்றி விசாரித்தபோது, மெடிக்கல் ஷாப் உரிமையாளர், அப்பெண் பேம்ப்பர்ஸ் வாங்கினதை பற்றியும், கூப்பனில் நம்பர் எழுதி கொடுத்ததை பற்றியும் தெரிவித்தார். பின்னர் அந்த செல்போன் நம்பரை அழைக்கும் போது, ஸ்வீட்ச் ஆப் ஆகியிருந்தது. அந்த நம்பர் வாங்கிய போது, கொடுத்த நம்பரில் அழைத்த போது ஸ்வீட்ச் ஆப் ஆகியிருந்தது. இது போல் மூன்று நம்பரை மாற்றி, நான்காவதாக ஒரு நம்பரை வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர், அந்த நம்பருக்கு அழைத்த போது, பட்டுக்கோட்டையில் இருப்பது தெரிய வந்ததையடுத்து, தனிப்படை போலீசார் அப்பெண்ணை கைது செய்து, குழந்தையை பத்திரமாக மீட்டனர்.




மேலும் போலீசார் விசாரணையில், அப்பெண், பட்டுக்கோட்டை, அண்ணா நகர் சேர்ந்த, பாலமுருகன் மனைவி விஜி (37). விஜிக்கு, பாலமுருகன் மூன்றாவது கணவர். கணவர் பாலமுருகனுக்கு சொத்துக்கள் அதிகமாக இருந்தது. ஆனால் இருவருக்கும் குழந்தை இல்லை. இதனால், கணவரிடம், நமக்கு பிறந்த குழந்தை என்று கூறி, சொத்துக்களை அபகரிப்பதற்காக,, ராஜலெட்சுமி குழந்தையை கடத்தியுள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விஜியிடம் மேலும் விசாரித்து வருகின்றோம் என்றார்.