தஞ்சாவூர்: இன்று தமிழகம் முழுவதும் ஆயுதபூஜை பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து தொழில் நிறுவனங்களிலும் ஆயுத பூஜை கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. இந்நிலையில் தஞ்சையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
மகா சக்தியான துர்கா தேவியைப் போற்றும் வகையில் ஒன்பது நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும் ஓர் விழா தான் நவராத்திரி. இந்த ஒன்பது நாட்களும் துர்கா தேவியின் 9 வடிவங்கள் வழிபடப்படுகிறது.
தென்னிந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று ஆயுத பூஜை. ஒவ்வொரு பெயர் கொண்டு அழைக்கப்படும் இந்த விழாவானது, நவராத்திரியின் 9 ஆவது நாள் கொண்டாடப்படும். அன்றைய தினம், மகா நவமி என்றும் அழைக்கப்படுவதுண்டு.
புராண கதைகளின் படி ஆயுத பூஜையானது நவராத்திரியுடன் தொடர்புடையது. தேவி துர்கா, மஹிஷாசுரா என்ற அரக்கனை அஷ்டமி மற்றும் நவமி சந்திப்பில் கொன்றதாகவும், அதன் பின்னர் வதத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை தேவி கீழே போட்டு விட்டதாகவும் நம்பப்படுகிறது. அந்த நாளை தான் ஆயுத பூஜையாக கொண்டாட தொடங்கினர்.
மேலும் ஆயுத பூஜை என்பது அரக்க ராஜாவை, தேவி துர்கா வீழ்த்தியதன் வெற்றியின் கொண்டாட்டமாகவே கருதப்படுகிறது. ஆயுத பூஜை ஆயுதங்களை குறிக்கிறது. பண்டைய காலங்களில், ஆயுதங்களை வணங்கும் நாளாகவே ஆயுத பூஜை திகழ்ந்தது. தற்போதைய நவீன காலக்கட்டத்தில், விஸ்வகர்மா பூஜையைப் போலவே, கருவி அல்லது கைவினைஞர்களின் கருவிகளுக்கும் மரியாதை செலுத்தும் விதமாக இது மாற்றப்பட்டுள்ளது. ஆயுத பூஜையானது கைவினைஞர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், ஒவ்வொரு கருவிகளும் அந்தந்த தொழிலில் வெற்றியை அடைய உதவுகின்றன என்று நம்பப்படுகிறது.
மேலும், அவர்கள் சிறப்பாக செயல்படுவதற்கும், வெகுமதி பெறுவதற்கும், வழிபாடு நடத்தப்படுகிறது. ஒரு வியாபார விருதி யந்திரத்தை வழிபடுவது உங்கள் தொழில்முறை உறவுகளை மேம்படுத்தவும், உங்கள் வணிகத்திற்கு நேர்மறையான மாற்றத்தை கொண்டு வரவும், தொழிலை விரிவுபடுத்தவும் உதவிடும். சமீபத்திய காலங்களில், மக்கள் தங்கள் வாகனங்களையும் வணங்க தொடங்கிவிட்டனர்.
பொதுவாக, ஆயுதபூஜை நாளில், தொழிற்சாலைகள், அலுவலகங்கள், கல்வி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். பூக்கள் நிறைந்த அலங்காரத்துடன் அலுவலகங்கள் அழகுப்படுத்தப்படும். பழங்கள், பொரி மற்றும் கடலை, வெல்லம், பொங்கல் ஆகியவை கடவுளுக்கு படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கும்.
அந்த வகையில், தஞ்சையில் இன்று பூக்கள், பழங்கள், பூஜை பொருட்கள், தேங்காய், பூசணி, பொரி, கடலை விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது. இதேபோல் தஞ்சை பூக்கார தெரு மற்றும் விளார் சாலை தனியார் மண்டபம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள பூ மார்க்கெட்டில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது.
திண்டுக்கல், மதுரை, சேலம், ஓசூர் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் அதிகளவு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. பூக்கள் வரத்து அதிகமாக இருந்தாலும் ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு பூக்களின் தேவை வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. இதன் காரணமாக பூ மார்க்கெட்டில் இன்று பல்வேறு பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
2 நாட்களுக்கு முன்பு மல்லிகை கிலோ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று கணிசமாக உயர்ந்து கிலோ ரூ.1000-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் கனகாம்பரம் , முல்லை தலா ரூ.1000, செவ்வந்தி கிலோ ரூ.350, அரளி ரூ.500, ஆப்பிள் ரோஸ் ரூ.300-க்கு விற்பனையானது. இந்த பூக்களின் விலையும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விற்கப்பட்டதை விட தற்போது விலை உயர்ந்துள்ளது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, மார்க்கெட்டுக்கு இன்று பூக்களின் வரத்து அதிகமாக உள்ளது. இன்று ஆயுதபூஜை என்பதால் பூக்கள் தேவை அதிகரித்துள்ளது. இதனால் அவற்றின் விலையும் உயர்ந்துள்ளது என்றனர்.