உலகில் சக மனிதனை மற்றொரு மனிதன் மோசடி செய்து அவரிடமிருந்து பொருள் பணம் நகை உள்ளிட்டவைகளை அபகரிப்பது என்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. ஒரு சில பெண்கள் ஆண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரிடமிருந்து பணம் நகை உள்ளிட்டவைகளை பறித்துக் கொண்டு ஏமாற்றும் சம்பவங்களும், அதேபோன்று சில ஆண்கள் பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்களிடமிருந்து நகை பணம் உள்ளிட்டவைகளை அபகரிக்கும் நிகழ்வை நாம் அன்றாடம் செய்திகள் வாயிலாக அறிந்த ஒன்றே. அதேபோன்று ஒரு சம்பவம் தான் மீண்டும் மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது நடைபெற்றுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கிளியனூரைச் சேர்ந்தவர் தங்கையன் என்பவரின் மகன் 28 வயதான சின்னதம்பி. வெளிநாட்டில் வேலை பார்த்துவரும் இவருக்கு, இந்த ஆண்டு சொந்த ஊருக்கு வந்த சின்னதம்பிக்கு திருமணம் செய்துவைக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்து, மயிலாடுதுறை அருகே வில்லியநல்லூர் மேட்டுத்தெருவில் வசிக்கும் முருகன் என்பவரது மகள் 18 வயதான அபிநயா என்ற பெண்ணை கடந்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, தனது வருங்கால மனைவிக்கு 2 பவுன் தங்க செயின், 13 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன், பெண்ணின் தந்தைக்கு ஸ்பிளண்டர் பிளஸ் பைக் ஆகியவற்றை தனது சொந்த செலவில் சின்னதம்பி வாங்கித்தந்துள்ளார். இந்நிலையில் சின்னதம்பி கடந்த 15-ஆம் தேதி அபிநயாவின் பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டு திருமணம் தொடர்பாக பேசிய போது, அபிநயாவின் பெற்றோர் அபிநயாவைக் காணவில்லை என்றும், தேடி வருவதாகவும் அவரது தெரிவித்துள்ளனர்.
அதன்பின் அபிநயாவை தொடர்புகொண்டு சின்னதம்பி பேசியபோது, நான் தங்களை திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்றும், நீ வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள், இது என் பெற்றோருக்கும் தெரியும் என்று கூறி துண்டித்துள்ளார். இதையடுத்து இது தொடர்பாக ஊர் முக்கியஸ்தர்களிடம் சொல்லி கேட்டபோது, நிச்சயதார்த்தத்துக்கு செலவு செய்த 50 ஆயிரம் ரூபாய், சின்னதம்பி வாங்கித்தந்த செயின், செல்போன், இருசக்கர வாகனம் ஆகியவற்றை திருப்பித் தந்துவிடுவதாக பெண்ணின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
அதன்பின்னும் பல நாட்கள் கடந்த பிறகும் அப்பொருட்களையும், பணத்தையும் தராமல் மாப்பிள்ளை வீட்டாரை பெண் வீட்டார் அலைக்கழித்துள்ளனர். இதனால், பாதிக்கப்பட்ட மணமகனின் குடும்பத்தினர் தாங்கள் செலவு செய்தவற்றை திரும்ப பெற்றுத்தருமாறு மணல்மேடு காவல் நிலையத்தில் கடந்த 25 தேதி புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக பெண்ணின் ஊரில் இருந்து தனக்கு செல்போனில் கொலை மிரட்டல்கள் வருவதாகவும், காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சின்னதம்பி எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார், இதனை அறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050