மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை சட்டப்பேரவை அரசு உறுதிமொழிக்குழுத் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் தலைமையிலான மேலும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய உறுதிமொழிக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில், மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.




இக்கூட்டத்தில், உறுதிமொழிக்குழுவினர் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர். கூட்டத்தின் முடிவில், செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை அரசு உறுதிமொழிக்குழுத் தலைவர் வேல்முருகன் கூறுகையில், "மயிலாடுதுறை மாவட்டத்தில், 250 உறுதிமொழிகள் அரசால் அறிவிக்கப்பட்டு 85 பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 8 உறுதிமொழிகள் இன்று படித்து பதிவு செய்யப்பட்டுள்ளன. 111 பணிகளுக்கு ஒப்புதல் பெற நிலுவையில் உள்ளது. சாலை, வாய்க்கால் என நீண்ட நாள் பணிகள் 38 நிலுவையில் உள்ளன. விரைவில் அறிவிக்கப்பட்ட அனைத்து உறுதிமொழிகளும் நிறைவேற்றிட இக்குழு முனைப்புடன் செயல்படும்.  




தலைஞாயிறு என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறப்பதற்கு உறுதிமொழிக் குழு அரசுக்கு பரிந்துரைக்கும். மயிலாடுதுறை மாவட்டத்துக்கு அரசு மருத்துவக் கல்லூரி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் உறுதிமொழிக் குழுவின் மூலம் முன்னுரிமை அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்டத்தில்  அரசு மருத்துவக் கல்லூரி கொண்டு வர இக்குழுவின் மூலம் பரிந்துரை செய்யப்படும்" என்றார். 




முன்னதாக மயிலாடுதுறை மணக்குடி கிராமத்தில் 13 ஏக்கர் பரப்பளவில் 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணியை சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அக்குழுவின் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் கூறுகையில், புதிய பேருந்து நிலையம் கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்படும் கம்பியின் தடிமன் மெல்லியதாக உள்ளதாகவும், இதனை அரசு பொறியியல் துறையினர் அனுமதித்து இருந்தாலும், நீண்ட கால தேவைக்காக இதைவிட தடிமனான கம்பியை பயன்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வுசெய்து சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழுவினருக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.




இப்பணியைக் கண்காணிக்க வேண்டிய நகராட்சி பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் பணியிடங்கள் மயிலாடுதுறை நகராட்சியில் காலியாக உள்ளதால், இப்பணி தரமாக இருக்காது என குழு கருதுகிறது, எனவே, மாவட்ட ஆட்சியரின் நேரடி மேற்பார்வையில் இந்த பணிகள் நடைபெற வேண்டும் என்ற பரிந்துரையை குழு வழங்கியுள்ளது என்றார். இதேபோன்று தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி வாரியத்தின் மூலம் 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் குடியிருப்புகளை குழுவினர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை, கவர்னர் பங்களா, பூம்புகார் தீயணைப்பு நிலையம் மற்றும் அலுவலர்களுக்கான குடியிருப்பு கட்டம் கட்டும் பணி, பூம்புகார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்று வரும் வகுப்பறை கட்டங்கள்  உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.




இந்த ஆய்வின் போது, சட்டபேரவை உறுதிமொழி குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை, அருள், கருணாநிதி, சக்ரபாணி, மோகன், ராமலிங்கம், ஜெயக்குமார் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் உறுதி மொழிக்குழு செயலாளர் முனைவர்.சீனிவாசன் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதாமுருகன், நகராட்சி தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.