இரண்டு கிலோமீட்டர் தூரம் பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் தூய்மை பணியை தனியார் மயமாக்கும் அவுட் சோர்சிங் முறையை தடுத்து நிறுத்த வேண்டும் அரசாணை எண் (2டி) 62 படி குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களை பணி நிரந்தரம் செய்து காலம் வரை ஊதியம் பணிக்கொடை சம்பள நிலுவை தொகைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் விளமல் கப்பாலம் பகுதியில் இருந்து பேரணியாக சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக பிரதான வாயிலின் கேட்டுகளை மூடி தடுப்பு அரண்களை அமைத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழையாத வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பேரணியாக வந்த தூய்மை பணியாளர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பியபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த போராட்டத்தில் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசு அறிவித்த 5000 ரூபாய் சம்பளத் தொகையினை 2023 ஏப்ரல் மாதத்தில் இருந்து அரியர் தொகையோடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் கண்டனம முழக்கங்களை எழுப்பினர். திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முருகையன் தலைமை வகித்தார். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்து இரண்டுக்கும் மேற்பட்ட பேருந்துகளில் ஏற்றி பவித்திரமாணிக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். 200 க்கு மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து பொதுமக்களை காவல்துறையினர் மாற்று வழி மூலம் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்