தஞ்சாவூர்: தஞ்சையில் புத்தகத்திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வரும் 24-ந்தேதி வரை நடைபெறுகிறது. இது தொடர்பான விழிப்புணர்வு போஸ்டர்களை பஸ் மற்றும் ஆட்டோக்களில் கலெக்டர் தீபக் ஜேக்கப் ஒட்டினார். இந்த புத்தகத் திருவிழாவில் உணவுகளின் அணிவகுப்பும் நடக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


தஞ்சை மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தகத்திருவிழா 6-வது ஆண்டாக தஞ்சை அரண்மனை வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த புத்தக திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வரும் 24-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. விழாவிற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார்.


புத்தக திருவிழாவை இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இதில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த புத்தக திருவிழாவில் 110 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பல்வேறு முன்னணி பதிப்பகத்தின் நூல்கள் இடம் பெறுகின்றன.




புத்தகத்திருவிழா காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. திருவிழாவில் காலை 10.30 மணிக்கு இலக்கிய அரங்கமும், 11 மணிக்கு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையேயான போட்டிகளும் நடைபெறுகின்றன. மாலை 4.30 மணிக்கு பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், 5 மணிக்கு கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.


மாலை 6.30 மணிக்கு நகைச்சுவை சிந்தனை அரங்கம் நடைபெறுகின்றன. இதில் பட்டிமன்ற நடுவர்கள், பேச்சாளர்களான மோகனசுந்தரம், மதுக்கூர் ராமலிங்கம், பாரதி பாஸ்கர், சிவகுமார், ராஜாராம், சேஷாத்திரி, ராஜா, ராஜ்மோகன், ராமகிருஷ்ணன், ஈரோடு மகேஷ், ராமச்சந்திரன், சாந்தாமணி, சண்மகவடிவேலு, கவிதாஜவகர், ஞானசம்பந்தம், திரைப்பட நடிகை ரோகிணி, ஓய்வு பெற்ற தலைமை செயலாளர் இறையன்பு, சுந்தரஆவுடையப்பன், சுகி.சிவம், சிவராமன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.


மேலும் சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவ பகுதி உணவுகளின் அணிவகுப்பும் (உணவுத்திருவிழா) நடைபெறுகிறது. இந்த புத்தகத் திருவிழாவையாட்டி விழிப்புணர்வு போஸ்டர் ஓட்டும் நிகழ்ச்சி மற்றும் துண்டு பிரசுரம் வினியோகம் தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் தீபக் ஜேக்கப் கலந்து கொண்டு விழிப்புணர்வு போஸ்டரை பஸ் மற்றும் ஆட்டோக்களில் ஒட்டினர்.


பின்னர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள், கல்லூரி மாணவ, மாணவிகளிடம் துண்டு பிரசுரங்களையும் வழங்கினார். இதில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், கோட்டாட்சியர் பழனிவேல், தாசில்தார் சக்திவேல், வட்டார போக்குவத்து அலுவலர் முருகன், மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ்காந்தி, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், ரெட்கிராஸ் துணைத்தலைவர் முத்துக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.