தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம்..


கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் கீழவீதியில், 11 சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசனமும், 10 நடராஜரும், ஏகாம்பரேஸ்வரர் கோயில் காளியும் ஒரே இடத்தில்  காட்சியளிக்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது.ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து  சிவாலயங்களில் நடராஜருக்கும், சிவகாமி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகமும், நேற்று ஆருத்ரா தரிசனமும் நடைபெற்றது.


திருக்கயிலாயத்தில் தேவர்கள் மார்கழி மாத திருவாதிரை திருநாளில் நடராஜப் பெருமானின் திருநடனத்தை காண விரும்பினர். அவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் இறைவன் கயிலாயத்திலிருந்து ஆனந்த சபையை நான்கு யானைகள், இரண்டு குதிரைகள் பூட்டி  ரதத்துடன் இறங்கி சுவாமி நர்த்தனம் ஆட,  சிவகாமிசுந்தரி தாளமிட, வேணுகோபாலசுவாமி புல்லாங்குழல் இசைக்க ஆனந்த தாண்டவம் புரியும் கோலத்தில் சிவகாமசுந்தரி சமேதராக நடராஜர் ஒவ்வொரு சிவாலயத்திலும் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.இத்தகையை சிறப்புடைய இந்நிகழ்ச்சி ஆண்டுதோறும் மார்காழி மாத திருவாதிரை அன்று ஊடல் உற்சவமாகவும், ஆருத்ரா தரிசனமாகவும் கொண்டாடப்படுகிறது.




தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா உடையார் கோயிலில் உள்ள கரவந்தீஸ்வரர் கோயில்,  ராஜராஜ சோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குளத்தின் நடுவே கட்டப்பட்டது. பிரம்மனுக்கு சாபம் ஏற்பட்டதால் அவரால் படைக்கும் தொழிலை செய்ய முடியாமல் போனது‌. இதையடுத்து இக்கோவிலை சுற்றியுள்ள நீரினை நான்கு திசைகளை கருதி நான்கு வேதங்களாக பாவித்து இக்கோவிலில் உள்ள சிவபெருமானை புனிதநீரால் அபிஷேகம் செய்து வணங்கியதால் அவருக்கு சாபம் நீங்கியது என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோவிலை பெரிய கோவிலை கட்டிய 13 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜராஜ சோழன் கட்டியதாக வரலாறு கூறுகிறது. கோவிலை சுற்றி நீர் சூழ்ந்து இருந்ததால் அக்காலத்தில் பக்தர்கள் படகில் வந்து தரிசனம் செய்து வந்தனர். தற்போது இக்கோவிலுக்கு வாகனங்கள் செல்லும் வகையில் பாதை அமைக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.




இத்தகைய பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருவெம்பாவை பதிகம் பாடப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க உள்பிரகாரத்தில் வீதி உலா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இக்கோவிலின், எதிரே உள்ள திருபுவனமாதேவிப்பேரேரி  எனும் வேததீர்த்த குளத்தில் அக்கோவிலின் அஸ்திரதேவருக்கு பால், மஞ்சள், சந்தனம், திரவியப்பொடி, எலுமிச்சை சாறு உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் கிராமமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.




இதே போல் தஞ்சாவூர் பெரிய கோயிலில்  நடராஜருக்கும், சிவகாமி அம்பாளுக்கும் பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.இதைத்தொடர்ந்து காலை ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள்  கலந்து கொண்டனர். பின்னர் உற்சவ நடராஜ பெருமான் கோயில் உட்பிரகாரத்தில் புறப்பாடும், தீர்த்தவாரியும் நடைபெற்றது.திருவைாறு பஞ்சநதீஸ்வரர் கோயிலில் ஆட்கொண்டேஸ்வரர் சுவாமிக்கு திருவாதிரையை முன்னிட்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து  காலை நடராஜர், சிவகாமசுந்தரி சிறப்பு அலங்காரத்தில் ஆட்கொண்டேஸ்வரர் சிலைக் சன்னதிக்கு வந்தடைந்தன. அப்போது ஒரே நேரத்தில் மூன்று சிலைகளுக்கும் தீபாராதனை நடைபெற்றது. 




கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் திருவாதிரை மகாஅபிஷேகமும், காலை 6 மணிக்கு ஆருத்ரா தரிசனக் காட்சியும், பின்னர் இந்திர விமானத்தில் நடராஜப் பெருமான் இரட்டை வீதிவுலாவும் நடைபெற்றது. அதன்படி கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் கீழவீதியில்,  11 சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசனமும், 10 நடராஜரும் ,ஏகாம்பரேஸ்வரர் கோயில் காளியும் ஒரே இடத்தில்  காட்சியளிக்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது.


அதே போல் நாகேஸ்வரர் கோயில், சோமேஸ்வரர்கோயில், காசிவிஸ்வநாதர் கோயில், அபிமுகேஸ்வரர் கோயில், கவுதமேஸ்வரர் கோயில், கம்பட்டவிஸ்வநாதர் கோயில், பாணபுரீஸ்வரர் கோயில், காளகஸ்தீஸ்வரர்கோயில், கோடீஸ்வரசுவாமி கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயிலிலும் ஆருத்ரா தரிசன சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. ஊடல் வைபவம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.