இந்திராகாந்தி தேசிய கலை மையம் சார்பில், தஞ்சாவூர் உற்சவம் எனும் கலைவிழா என்ற, இயல், இசை, நாடக முப்பெரும் விழா தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தில் மூன்று நாட்கள் நடைபெற்றது. இந்திராகாந்தி தேசிய கலை மையம், தென்னகப் பண்பாட்டு மையம் மற்றும் இந்திய தொல்லியல் துறை இனைந்து 75-வது ஆண்டு இந்திய சுதந்திரதின கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மைய வளாகத்தில் தஞ்சாவூர் உற்சவம் என்ற இயல், இசை, நாடக முப்பெரும் கலை விழா கடந்த 11 ந்தேதி முதல் தொடங்கி பிப்.13ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற்றது. இவ்விழாவினை முன்னிட்டு கடந்த 11 ந்தேதி காலை 9 மணியளவில் இந்திராகாந்தி தேசிய கலை மைய அறங்காவலர் முனைவர் பத்மாசுப்ரமணியம் முன்னிலையில், தஞ்சாவூர் அரண்மனை மூத்த இளவரசர் பாபாஜி ராஜாபோன்ஸ்லே தொடங்கி வைத்தார்.
உத்திராபதி குழுவினரின் மங்கள இசை, வேத பாராயணம் மற்றும் சுவாமிநாத ஓதுவார் குழுவினரின் தேவார இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. காலையில் கருத்தரங்கமும் மாலை 6 மணிக்கு, தென்னக பண்பாட்டு மைய திறந்தவெளி அரங்கில், பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கடந்த 12 ந் தேதி தஞ்சாவூர் ஓவியம் குறித்த பயிற்சி பட்டறைகள், கிராமிய நடனம், தப்பாட்டம், வாய்ப்பாட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
13- ந் தேதி நடனம் மற்றும் நாடகம், பயிற்சி பட்டறைகள் தென்னக பண்பாட்டு மையத்தில் காலை 9 முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. சிறப்பு நிகழ்ச்சியாக மாலை 6.30 மணிக்கு முனைவர் நர்த்தகி நடராஜ் குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சியும், மைசூர் மஞ்சுநாத் குழுவினரின் வயலின் இசை நிகழ்வும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலத்திலிருந்து 60 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் உற்சவத்தில் நடைபெறும் 3 நாள் பயிற்சி பட்டறையில் இயல், இசை மற்றும் நாடகம் (நடனம்) ஆகியவற்றில் ஆர்வம் கொண்ட மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்துகொண்டனர். பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு இந்திராகாந்தி தேசிய கலை மையத்தின் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தஞ்சாவூர் உற்சவம் கலை விழாவினை மூன்று நாட்களில் ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டனர்.
இந்நிகழ்ச்சியில், இந்திராகாந்தி தேசிய கலை மைய வதோதரா மண்டல இயக்குநர் அருப்பா லகிரி, இந்திராகாந்தி தேசிய கலை மைய புதுச்சேரி மண்டல இயக்குநர் முனைவர் கோபால், இந்தியல் தொல்லியல் துறை திருச்சி சரக இயக்குநர் முனைவர் அருண்ராஜ், தென்னகப் பண்பாட்டு மைய நிர்வாக அலுவலர் பொறுப்பு ராஜகோபாலன், சரஸ்வதி மகால் நூலக முன்னாள் காப்பாளர் பெருமாள் மற்றும் தென்னகப் பண்பாட்டு மைய நண்பர்கள் குழு செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.