தஞ்சை புதிய பஸ்ஸ்டாண்ட் அருகில் பள்ளிவாசலில் அத்துமீறி நுழைந்து தகராறில் ஈடுபட்டு இமாமை தாக்கிய ராணுவ வீரரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சை புதிய பஸ்ஸ்டாண்ட் அருகே பாஸ்கரபுரத்தில் அல் அன்சர் பள்ளிவாசலில் உள்ளது. இங்கு பள்ளிவாசல் ஒலிப்பெருக்கியில் தொழுகைக்கான அழைப்பு (பாங்கு) கொடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது பள்ளிவாசலுக்குள் செருப்புடன் நுழைந்து ஒரு நபர் அங்கு இருந்த ஊழியரை தாக்கி உள்ளார்.
பின்னர் அந்த நபர் தனது செல்போனில் ஹரே கிருஷ்ணா ஜெய் ஸ்ரீராம் என்ற பாடலை ஒலிக்க விட்டுள்ளார். மேலும் பள்ளிவாசல் மைக்கில் தன் செல்போனை வைத்து ஒலிபரப்புமாறு பிரச்சனை செய்துள்ளார். இதனால் பள்ளிவாசலில் இருந்தவர்களுக்கும் அந்த நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் பள்ளிவாசல் இமாம் ஜெயினுலாபுதீனை, அந்த நபர் தாக்கியுள்ளார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு உருவானது. ஏராளமான இஸ்லாமியர்கள் குவிந்தனர்.
இதுகுறித்து மருத்துவக்கல்லூரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளிவாசலுக்கு வந்த போலீசாரிடம் அந்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அந்த நபரை போலீசார் அங்கிருந்து வெளியேற்றினர். இதையடுத்து போலீஸ் மேற்கொண்ட விசாரணையில் அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ரஹ்மான் நகரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் ராஜா (35) என்பதும், அசாமில் ராணுவத்தில் பணிபுரிவதும், விடுப்பில் வந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அவரை எச்சரிக்கை செய்து அனுப்பியதாக தெரிய வருகிறது.
இதற்கிடையில் சம்பவம் குறித்து அறிந்த ஏராளமான இஸ்லாமியர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் ஸ்டேஷன் முன்பு திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பள்ளிவாசலுக்குள் நுழைந்து தகராறில் ஈடுபட்ட ராஜா மீது மருத்துவக்கல்லூரி போலீசில் பள்ளிவாசல் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் போலீஸார் ராஜாவை விசாரணைக்கு அழைக்க சென்ற போது அவர் வீட்டில் இல்லை.
பின்னர் தஞ்சை டவுன் டிஎஸ்பி ராஜா விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து ராணுவ வீரர் ராஜா மீது தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ராஜா ராணுவ வீரர் என்பதால் முறைப்படி ராணுவ ரெஜிமெண்ட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் ராஜாவை கைது செய்து தஞ்சை கிளை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மருத்துவக்கல்லூரி, புதிய பஸ்ஸ்டாண்ட் பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் தகவல் அறிந்து பள்ளிவாசல் முன்பு குவிந்தனர். பின்னர் அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர் என்றும் கூறப்படுகிறது.