தஞ்சாவூர் மாநகராட்சி கூட்டம் மேயர் சண். ராமநாதன் தலைமையில் நடந்தது. ஆணையர் சரவணகுமார், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் மாநகராட்சி உறுப்பினர்கள் பேசியதாவது:



கண்ணுக்கினியாள் (அமமுக): காமராஜர் சந்தையைப் போல பூச்சந்தை பிரச்னைக்கும் தீர்வு காண வேண்டும். அதே இடத்திலேயே பூச்சந்தை நடைபெற உதவி செய்ய வேண்டும்.

மேயர்: பூக்காரத் தெருவில் சாலை விரிவாக்கப் பணி மட்டுமே மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது. இரு தரப்பினரும் ஒற்றுமையாகச் செயல்பட்டு இருக்க வேண்டும். இரு பிரிவாகப் பிரிந்திருப்பது தவறு. இது தொடர்பாக வரும் 2ம் தேதி நடைபெறும் அமைதி பேச்சுவார்த்தையில் ஒற்றுமை ஏற்படும் என நம்புகிறோம்.

இதையடுத்து பாதாள சாக்கடை பிரச்னை குறித்து கண்ணுக்கினியாள் பேசியபோது, அவருக்கும், மேயர், திமுக உறுப்பினர்கள் சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, சில நிமிடங்களுக்கு சலசலப்பு நிலவியது.





காந்திமதி (அதிமுக): பெரியகோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு இடமில்லாததால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மேயர்: பெரியகோயிலுக்கு எதிரே உள்ள வாகன நிறுத்துமிடம் மட்டுமல்லாமல், திலகர் திடலும் வாகனங்களை நிறுத்துவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இட வசதி செய்வதற்கு மாவட்ட கலெக்டரிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

கோபால் (அதிமுக): எங்களது வார்டில் ஒரு பணியும் நடைபெறவில்லை. சாக்கடையில் கழிவு நீர் தேங்கி நிற்பதால், துர்நாற்றம், கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால், ஒவ்வொரு நிமிடமும் போராட்டமாக உள்ளது. அனைத்து கடைகள் முன்பும் சாக்கடை திறந்தவெளியில் இருப்பதால், வியாபாரமும் பாதிக்கப்படுகிறது.

மேயர்: சாக்கடை கட்டுமானப் பணி கொஞ்சம்தான் உள்ளதால், விரைவாக முடிக்கப்படும்.

எம். உஷா (திமுக): 39 ஆவது வார்டில் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டாலும், வேலை நடைபெறவில்லை.

மேயர்: விரைவாக நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும்.

இதைத்தொடர்ந்து, உறுப்பினர் உஷாவுக்கும், மேயருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் எதிர்கட்சித் தலைவர் கே. மணிகண்டன் (அதிமுக) பேசுகையில், சரபோஜி சந்தையில் 46 கடைகள் திரும்ப ஒப்படைப்பது குறித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது எனக் கூறியபோது, அவருக்கும், மேயருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, மேயருக்கு ஆதரவாக திமுகவினரும், மணிகண்டனுக்கு ஆதரவாக அதிமுக, அமமுக உறுப்பினர்களும் பேசியதால், சில நிமிடங்களுக்கு சலசலப்பு நிலவியது. இதனிடையே மேயர், அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாகவும், கூட்டம் முடிவடைந்து விட்டதாகவும் கூறி எழுந்து சென்றார்.





கூட்டம் முடிந்த பின்னர் அதிமுக கவுன்சிலர் மணிகண்டன் கூறுகையில், கேள்வியைத் திசை திருப்பும் விதமாக மேயர் பேசுகிறார். மேலும், உரிய பதிலை சொல்லாமல், கூட்டத்தை விட்டுச் செல்கிறார். தொடர்ந்து மேயர் இதுபோல எதிர்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல், புறக்கணிக்கிறார். இதே மாதிரி ஒவ்வொரு கூட்டத்திலும் செய்வதைக் கண்டிக்கிறோம். இனியும் இதுபோன்று செய்தால்  நாங்கள் கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டு வெளிநடப்பு செய்வோம் என்றார்.