தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ரூ.191 கோடி  திட்ட மதிப்பீட்டில் புறவழிச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. மானாமதுரை - பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக கண்டியூர், திருவையாறு, பெரும்புலியூர், கல்யாணபுரம் உள்ளிட்ட 6 கிராமங்களின் வழியே சுமார் 7 கிலோமீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படுகிறது.


விளைநிலங்களை அழித்து இந்த புறவழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருவையாறு அருகே கண்டியூரில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சந்தித்து பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் விளைநிலங்களில் அமைக்கப்படும் சாலை பகுதிகளையும் அவர் பார்வையிட்டார்.


பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த பகுதியில் சாலை அமைப்பதாக கூறி பயிர்களை அழித்து படுகொலை செய்திருக்கிறது இந்த அரசு. இது சர்வாதிகாரம் கிடையாது. இது கொடுங்கோல் செயல். 40 நாட்கள் முதல் 50 நாளில் விளைந்த பயிர்களை, கர்ப்பிணி பெண்களைப் போல் உயிரோடு புதைத்துள்ளனர்.  தஞ்சாவூர் நன்றாக விளைந்தால் தமிழ்நாடு முழுவதும் சோறு போடலாம். தமிழ்நாடு முழுவதும் நல்லா விளைந்தால் உலகத்துக்கே சோறு போடலாம் என்பது முன்னோர் மொழி.




நீங்க முன்னறிவிப்பு செய்யவில்லை. நடவுக்கு முன்பு அல்லது அறுவடை முடிந்த பிறகு விவசாயிகளை அழைத்து பேசி இந்த புறவழிச்சாலையின் அவசியம் குறித்து கூறி ஒரு உரிய தொகை, இழப்பீடு கிடையாது. உரிய தொகையை கொடுத்து விவசாயிகளின் ஒப்புதலோடு நிலத்தை பெற்று நீங்க சாலையை அமைத்து இருந்தால் அது வேறு மாதிரியான அணுகுமுறை.


அந்த தஞ்சாவூரை அழித்து இந்த சாலை போட அவசியம் என்ன. இதற்கு முதன்மை காரணம் காவிரி, கொள்ளிடம், குடமுருட்டி ஆறுகளில் இருந்து மண்ணை அள்ளிக் கொண்டு வசதியாக செல்ல அமைக்கப்படுகிறது. இந்த பகுதியில் முதன்மை சாலையில் லாரிகளில் மணலை கொண்டு போகும் போது விபத்துக்கள் ஏற்படுகிறது. அதனால் மக்கள் போராட்டத்தில் ஈடுபடும் நிலை ஏற்படுகிறது. எனவே இந்த புறவழிச்சாலை மூலம் மணலை திருடி கொண்டு செல்ல சாலை அமைக்கப்படுகிறது.




இந்த சாலை அதிமுக ஆட்சியில் அமைத்திருந்தால், திமுகவினர் எதிர்க்கட்சியாக இருந்தால் என்ன பாடுபடுத்தி இருப்பீர்கள். விவசாயிகள் எளிய மக்கள், உழைக்கும் மக்கள், அரசியல் வலிமை, அதிகார வலிமை அற்ற மக்கள் என்பதால் என்னவெல்லாம் செய்யலாம் என்ற திமிரில் செய்கிறீர்களா, இதை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்.


இது கொலைகார செயல், கொடுங்கோல் செயல். ராஜபக்சேவை விட படுகொலையாளர்கள். விவசாயிகளின் போராட்டத்தையும் மீறி சாலை அமைக்கப்பட்டால் நான் வந்து தடுத்து நிறுத்துவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.