அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் வெளிமாவட்ட மருத்துவமனைக்கு நோயாளிகள் சிகிச்சைக்கு செல்லும் அவலம்

 

திருவாரூரில் கடந்த 2008ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி உத்தரவின் அடிப்படையில், திருவாரூரில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு 2010 ஆம் ஆண்டு திருவாரூர் அருகே மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் பின்புறத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டது. திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி மாவட்டத்தைச் சுற்றியுள்ள நாகப்பட்டினம், புதுச்சேரி மாநிலத்திற்கு உட்பட்ட காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வரும் ஏழ்மையான மக்களுக்கு மருத்துவ வசதி பெற இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மிகவும் உதவியாக இருந்து வருகிறது.

 


 

இம்மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் பல குறைவாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். அதுபோல் 500க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் இந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சாதாரண நோய்களுக்கு மட்டுமின்றி இருதய நோய் உள்ளிட்ட பல முக்கிய நோய்களால் பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால் வரக்கூடிய நோயாளிகளுக்கு இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாத காரணத்தினால், சிறு சிறு காரணங்களுக்காக தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளிகள் பரிந்துரை செய்து அனுப்பப்படுவதாக நோயாளிகள் குற்றம்சாட்டுகின்றனர்.



இதேபோன்று திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் உள் நோயாளிகளுக்கு, இலவசமாக மருந்து வழங்க வேண்டிய அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆனது மருந்து பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக தனியார் கடைகளுக்கு சென்று மருந்து வாங்கி வர நோயாளிகளை அறிவுறுத்துவதாக நோயாளிகளின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். மருந்து வாங்க பணமில்லாத காரணத்தினால் அரசு மருத்துவமனையை நாடி வரும் நிலையில் அரசு மருத்துவமனையிலும் தனியார் மருந்து கடைகளுக்கு அனுப்பி விடுவதைக் கண்டு ஏழை மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

 

மேலும் மருத்துவமனையில் உள்ள கழிவுகளை மருத்துவமனை வளாகத்திலேயே கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கும் பொதுமக்கள், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து சேர்ந்தாலும் தொற்றுநோய் பாதிக்கும் அபாயம் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். நோயாளிகளுடன் வருபவர்கள் தங்குவதற்கு மருத்துவமனையில் எந்தவித வசதியும் இல்லாததால் மருத்துவமனை வாசலிலேயே தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.



கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் கிராமப்புறங்கள் அதிகமுள்ள திருவாரூர், நாகை மாவட்ட மக்கள் மருத்துவ வசதி பெற ஏதுவாக இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டது. ஆனால் தற்போது இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உரிய மருத்துவர்கள், மருத்துவ உபகரணங்கள், செவிலியர்கள் பற்றாக்குறை, என ஏராளமான குறைபாடுகள் உள்ள காரணத்தினால் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியவில்லை.

 

இதனால் வெளிமாவட்ட மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தற்போது மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று இருக்கும் நிலையில், திருவாரூர் மாவட்டம் தனது சொந்த மாவட்டம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்து வரும் நிலையில், அவரது சொந்த மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தரத்தை உயர்த்தி மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையை கலந்திட நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையுடன் திருவாரூர் மாவட்ட மக்கள் காத்திருக்கின்றனர்.