தஞ்சாவூர்: மதுரையில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இதயத்தை 2 மணிநேரத்தில் தஞ்சைக்கு கொண்டு வந்து 51 வயதுடையவருக்கு பொருத்தி அபெக்ஸ் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. 

Continues below advertisement

தஞ்சாவூரில் உள்ள அபெக்ஸ் (Apex)  மருத்துவமனையில், இறுதி கட்ட இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்ட பால்ராஜ் (51) என்பவர் சிகிச்சை பெற்று வருகிறது. இவர் 2012 மற்றும் 2019ம் ஆண்டு என இரண்டு முறை ஸ்டென்ட் சிகிச்சை பெற்றவர். மருந்துகள் மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் உயிர் பிழைத்திருந்த இவருக்கு, 'இறுதி கட்ட இதய செயலிழப்பு ஏற்பட்டது. இதற்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே ஒரே தீர்வாக இருந்தது. கடந்த மூன்று வாரங்களாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு வந்தார்.

Continues below advertisement

இந்தச் சூழலில், மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 21 வயது வாலிபரின் இதயத்தை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்தனர். அரசின் 'டிரான்ஸ்டான்' (TRANSTAN) அமைப்பின் முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையில் அந்த இதயம் தஞ்சாவூர் அபெக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்  பால்ராஜூக்கு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து மதுரையிலிருந்து தஞ்சாவூருக்கு அபெக்ஸ் இருதய மருத்துவமனையின் டாக்டர் சி.சிவசங்கர் நேரடியாக ஆம்புலன்ஸ்சில் கொண்டு வந்தார். இதயத்தை விரைவாகக் கொண்டு வர போலீசார் பெரும் உதவி செய்தனர். போக்குவரத்து நெரிசல் இன்றி 'ரிலே' முறையில் எவ்வித தடைகளும் இன்றி கொண்டு வர உதவிகள் செய்தனர். மேலும் சுங்கச்சாவடிகளில் ஆம்புலன்ஸ் வாகனம் நிற்காமல் செல்ல ஏற்பாடுகள் செய்தனர். இதனால் தாமதமின்றி இதயம் தஞ்சாவூருக்கு கொண்டு வரப்பட்டது. 

இதில் தஞ்சாவூர் எல்லையில் இருந்து அபெக்ஸ் மருத்துவமனையை அடையும் வரை போக்குவரத்து பிரிவு போலீசார் மிகவும் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதையடுத்து காலை 9 மணிக்கு மதுரையிலிருந்து இதயத்துடன் புறப்பட்ட ஆம்புலன்ஸ் 2 மணிநேரத்தில் தஞ்சாவூருக்கு வந்து சேர்ந்து வெற்றிகரமான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பால்ராஜூக்கு பொருத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டத்திலேயே முதல்முறையாக இதய மாற்று அறுவை சிகிச்சையை அபெக்ஸ் மருத்துவமனை வெற்றிகரமாக செய்து சாதித்துள்ளது. 

இருதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட பின்னரல் அபெக்ஸ் இருதய மருத்துவமனையின் டாக்டர்.சி.சிவசங்கர்,டாக்டர்.சி.ரவிசங்கர் ஆகியோர் கூறுகையல், டாக்டர். ஆஷிக் , ஜெயலட்சுமி, சத்தியனந்தன், விக்னேஷ் , அமித், அஷ்வந்திகா, அலெக்ஸ், சுந்தர், பாலாஜி, ஆனந்த் அஜித் குழுவினருடன் சேர்ந்து ரேலா மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர்.ஸ்ரீநாத் தலைமையிலான டாக்டர்கள் செந்தில்குமார், ஜெபின், குணாளன், மற்றும் பூபதி , கார்த்திக் குழுவினரின் ஒத்துழைப்புடன் இருதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. 

இந்த இருதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற, டிரான்ஸ்டான்  அமைப்பின் முழுமையான ஒத்துழைப்பும், மதுரையிலிருந்து தஞ்சாவூர் வரை இருதயத்தை பாதுகாப்பாகவும் வேகமாகவும் கொண்டு வந்து சேர்க்க உதவிய காவல்துறையினரின் ஆதரவும் குறிப்பாக தஞ்சாவூர் போக்குவரத்து காவல்துறையின் சிறப்பான பணியும் முக்கிய காரணமாக அமைந்தது என்று தெரிவித்தனர்.தஞ்சாவூர் அபெக்ஸ் மருத்துவமனையின் மருத்துவர்களான டாக்டர் சிவசங்கர், டாக்டர் ரவிசங்கர், டாக்டர் ஆஷிக் மற்றும் அவர்களது குழுவினர், சென்னையின் ரேலா (Rela) மருத்துவமனை நிபுணர்களுடன் இணைந்து சுமார் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்தனர். தற்போது பொருத்தப்பட்ட இதயம் சீரான துடிப்புடன் இயங்கத் தொடங்கியுள்ளதாக டாக்டர்கள் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் இத்தகைய இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுவது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருவதும், ஒருங்கிணைந்த மருத்துவக்குழுவின் செயல்பாடும் ஒரு உயிரைக் காப்பாற்ற உதவியுள்ளது.