காலமான பூண்டி கல்லூரி நிறுவனர் துளசி அய்யா வாண்டையார் உட்பட 4 பேர் மீது லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை பூண்டி புஷ்பம் கல்லூரி என்றால் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் கூட நன்கு அறிவார்கள். தஞ்சை நகர் பகுதி மட்டுமின்றி சுற்றியுள்ள ஏராளமான கிராமப்பகுதிகளை சேர்ந்த மாணவர்களுக்கு பூண்டி புஷ்பம் கல்லூரி என்பது ஒரு கோயில் போல்தான். அந்த பெருமை இன்று வரை திகழ்ந்து வருகிறது. காரணம் இந்த கல்லூரியில் படித்த பல்லாயிரக்கணக்கானோர் இன்று உலகம் முழுவதும் உயர்ந்த பதவிகளை வகித்து வருகின்றனர் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. பலர் கல்வியாளர்களாகவும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு அனைவராலும் இக்கல்லூரியின் நிறுவனர் பூண்டி துளசியய்யா வாண்டையார் காலமானார். தற்போது கல்லூரி நிர்வாகத்தை அவருடைய மகன் கிருஷ்ணசாமி வாண்டையார் கவனித்து வருகிறார். தஞ்சாவூர் அருகே பூண்டியில் அமைந்துள்ள இந்த தன்னாட்சி கலைக் கல்லூரியில் போலி ஆவணங்கள் கொடுத்து பேராசிரியர்கள் பணி நியமனத்தில் முறைகேடு நிகழ்ந்ததாக லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு போலீஸார் கல்லூரி கல்வி முன்னாள் மண்டல துணை இயக்குநர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதான் தற்போது தஞ்சை மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் அருகே பூண்டியில் புகழ்பெற்ற புஷ்பம் கலைக்கல்லூரி 1956-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியை காலஞ்சென்ற முன்னாள் எம்பி துளசி அய்யா வாண்டையார் குடும்பத்தினர் நிர்வகித்து வருகின்றனர்.
இக்கல்லூரியில் 2015 -ம் ஆண்டு முதல் 2017 -ம் ஆண்டு வரை பேராசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு கிடைத்த தகவலின்படி இன்ஸ்பெக்டர் சசிகலா விசாரணை நடத்தினார். இதையடுத்து இக்கல்லூரியில் கடந்த 2017-ம் ஆண்டு உதவி பேராசிரியர்கள் பணி நியமனத்தில் இன சுழற்சி முறையை பின்பற்றவில்லை. இதில் உதவி பேராசிரியர்கள் எஸ்.கே.தியாகராஜன், சி.கற்பகசுந்தரி ஆகிய இருவரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதை மறைத்து, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என போலியான சாதிச்சான்றிதழை வழங்கி பணியில் சேர்ந்துள்ளனர்.
இதை உண்மை என சமர்ப்பித்து, அரசை ஏமாற்றி கல்லூரி நிர்வாகம் 2017-ம் ஆண்டு முதல் தற்போது வரை அவர்களுக்கு ஊதியமாக ரூ. 55 லட்சம் பெற்று வழங்கியுள்ளது. எனவே இன சுழற்சி முறையில் பணி நியமனத்துக்கு தேர்வானவர்களின் சாதிச் சான்றிதழ்களின் உண்மை தன்மையை சரிபார்க்காமல் உதவி பேராசிரியர்களாக பணி நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கிய தஞ்சாவூர் மண்டல கல்லூரி கல்வி முன்னாள் துணை இயக்குநர் டி.அறிவுடைநம்பி, உதவிப் பேராசிரியர்கள் எஸ்.கே.தியாகராஜன், சி.கற்பகசுந்தரி, கல்லூரி தாளாளரும் முன்னாள் எம்பியும், காலஞ்சென்றவருமான கே.துளசிஅய்யா வாண்டையார் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 465, 120(பி),468, 471, 420, 409 ஆகிய பிரிவுகளின் கீழ் கடந்த ஜூலை 27-ம் தேதி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்