என்ன ஒரு வில்லத்தனம் என்று பொதுமக்கள் அதிர்ச்சியடையும் வகையில் டீக்கடையில் டீ குடித்துவிட்டு நின்றவரிடம் இருந்து செல்போன் பறித்து சென்றவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


தஞ்சை இந்திராநகரை சேர்ந்தவர் அஸ்விந்தன்(49). சம்பவத்தன்று ஈஸ்வரி நகரில் உள்ள டீக்கடையில் டீ குடித்துவிட்டு நின்றவரிடம் இருந்து மர்ம நபர் ஒருவர் கண்இமைக்கும் நேரத்தில் செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். என்ன நடந்தது என்று அஸ்விந்தன் உணரும் முன்பே இந்த சம்பவம் நடந்துவிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அஸ்விந்தன் இதுகுறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்தழகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

இதில் அஸ்விந்தனிடம் இருந்து செல்போனை பறித்து சென்றது தஞ்சை சேவப்பநாயக்கன்வாரி பகுதியை சேர்ந்த கரண் என்ற மதிஹரசுதன் என்று தெரிய வந்தது. இதையடுத்த கரணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், ஆண்களும் சரி, பெண்களும் சரி நடந்து செல்லும் போது செல்போன் பேசிக் கொண்டே செல்கின்றனர். இதனால் விபத்தில் சிக்கும் சம்பவங்களும் நடக்கிறது. மேலும் இது செல்போன் திருடர்களுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது. எனவே சாலையில் நடந்து செல்லும் போது செல்போன் பேசுவதை தவிர்த்து கொள்வது நல்லது என்றனர்.

கஞ்சா விற்றவர் கைது:


 





தஞ்சையில் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட எஸ்.பி., ரவளிப்பிரியா உத்தரவிட்டுள்ளார். இதன் பேரில் தஞ்சை நகர் பகுதிகளில் போலீசார் சந்தேகப்படும் பகுதிகளில் எல்லாம் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில தஞ்சையின் மையப்பகுதியாக விளங்கும் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக மேற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சந்திரா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் அந்த பகுதியில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகம்படும் வகையில் நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் பாலோபாநந்தவனம் பகுதியை சேர்ந்த மூர்த்தி மகன் இளவரசன்(26) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.  இதையடுத்து தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து இளவரசனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 365 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க தனிப்படை போலீசாரும் தஞ்சை மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனைகளும் அவ்வபோது நடத்தி வருகின்றனர். இதில் பலரும் சிக்கி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கஞ்சா பழக்கம் மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் அதிகரித்து வருவதால் போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண