தஞ்சாவூர்: தஞ்சை ஜெபமாலைபுரம் குப்பை கிடங்கில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். கடந்த வாரத்திலும் சிறிய அளவில் தீப்பிடித்து உடன் அணைக்கப்பட்டது. தற்போது மீண்டும் தீவிபத்து ஏற்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் அச்சம் உருவாகி உள்ளது.


ஜெபமாலைபுரம் மாநகராட்சி குப்பைக்கிடங்கு


தஞ்சை ஜெபமாலைபுரத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு அமைந்துள்ளது. தஞ்சை மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள் இந்த கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது . இந்த நிலையில் மாநகரில் உள்ள 14 கோட்டங்களில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்பட்டதால் குப்பைகள் அங்கு கொட்டப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு வருகின்றன.


மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகள்


ஜெபமாலைப்புரம் குப்பை கிடங்கில் உள்ள குப்பைகள் உரமாக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் அங்கு மலை போல் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அவ்வப்போது இந்த குப்பை கிடங்கில் தீ விபத்து நடந்து வருகிறது. கடந்த 27ம் தேதி இதுபோன்று தீவிபத்து ஏற்பட்டது. உடன் தீயணைப்பு வண்டிகள் வந்து தீயை அணைத்த சம்பவமும் நடந்து. இந்நிலையில் இன்று மதியம் திடீரென குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பற்றி எரிய தொடங்கியது . 




சுற்றி வளைத்த புகை மண்டலத்தால் மக்கள் அவதி


தகவலறிந்த தஞ்சை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்து காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. ஜெபமாலைபுரம், செக்கடி, மேலவீதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புகைமூட்டம் பரவியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் நடந்தது.


மீண்டும், மீண்டும் ஏற்படும் தீவிபத்து


மீண்டும், மீண்டும் இந்த குப்பைக்கிடங்கில் தீவிபத்து ஏற்படுவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் மருத்துவ குழுவினர் அந்த பகுதி மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தரவின் பேரில் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி மேற்பார்வையில், தஞ்சை மாநகர நல அலுவலர் டாக்டர். சுபாஷ் காந்தி தலைமையில் தஞ்சை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட செக்கடி உரக்கிடங்கு பகுதியில் சுகாதார ஆய்வு மற்றும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வானது ஆனந்தன் நகர், சாய்பாபா கோவில் சாலை, முருகன் நகர், தென் கீழ் அலங்கம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.


இந்த ஆய்வில் மருத்துவர்கள் முத்துக்குமார், லட்சுமண குமார், வெங்கடேஷ், கபில்தேவ் சந்தோஷ் உள்பட  56 பணியாளர்களைக் கொண்ட 5 மருத்துவ குழுக்கள் நியமிக்கப்பட்டன. மொத்தம் 12 தெருக்களில் உள்ள 341 வீடுகளில் 815 மக்களின் நலன் குறித்து ஆய்வு செய்யப்பட்டதோடு, முகக் கவசங்களும் வழங்கப்பட்டன. மருத்துவ ஆய்வின்போது இருவருக்கு லேசான மூச்சு திணறல் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு நெப்லைசர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு, மருந்துகளும் வழங்கப்பட்டன. இந்தப் பணியில் மக்களை தேடி மருத்துவம், மருந்தாளுநர் சுகாதாரப் பணியாளர்கள், ஊழியர்கள் ஈடுபட்டனர்.


புகை மூட்டத்தால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தற்போது காற்று மிக வேகமாக வீசுவதால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுபோன்று இனி எந்த தீவிபத்து சம்பவமும் நடக்காமல் இருக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துள்ளனர்.