மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா அஞ்சார்வார்த்தலை கிராமத்தில் விவசாய நிலப்பகுதியில் ஒஎன்ஜிசி நிறுவனம் 2002, 2008ம் ஆண்டுகளில் 2 எண்ணெய் கிணறுகளை அமைத்து எரிவாயு எடுத்தது. இதனால் அப்பகுதியில் 40 அடியில் கிடைத்த நிலத்தடிநீர் மட்டம் குறைந்து இப்பகுதியில் விவசாயம் கேள்விக்குறியானதுடன் குடிநீர் பற்றாக்குறையும் நிலவுகிறது. 




இந்நிலையில் அஞ்சார்வார்த்தலை கிராமத்தில் உள்ள 2 பழைய  எண்ணெய் கிணறுகளையும் சுத்தம் செய்வதாக கூறி ஓஎன்ஜிசி நிறுவனம் புதிய பணிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த பணிக்காக அங்கு ஏராளமாக ராட்சத குழாய்கள் இறக்கப்பட்டுள்ளதையும், புதிய கிணறு அமைக்க கழிவுநீர் தேக்கும் குளமும் வெட்டப்பட்டுள்ளதையும் பார்க்கும்போது அங்கு புதிதாக ஷேல் மீத்தேன் கிணறுகள் அமைக்கும் பணி நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 




தமிழ்நாடு அரசு காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவித்துள்ளதுடன், மீத்தேன், ஷேல் எரிவாயுக் கிணறுகள் அமைக்க அனுமதி இல்லை என்றும் மறுத்துள்ளது. தமிழ்நாடு அரசு எவ்வித எண்ணெய்-எரிவாயுக் கிணறு அமைக்கவும் அனுமதிக்காது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில், ஓஎன்ஜிசியின் புதிய பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்தகோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து ஓஎன்ஜிசி நிறுவனத்தை அப்பகுதியில் இருந்து வெளியேற்றக்கோரி கண்டன முழக்கமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 




அஞ்சார்வார்த்தலை கிராமத்தில் ஒஎன்ஜிசி நிறுவனம் பழைய எண்ணெய் கிணறுகளை சுத்தம் செய்வதாக கூறி சட்டத்திற்கு புறம்பாக ஷேல் மீத்தேன் கிணறு அமைப்பதாகவும் உடனடியாக தடுத்து நிறுத்தகோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதாவிடம் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர், அஞ்சார்வார்த்தலை கிராமத்தினர் நேற்று மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும், தமிழ்நாடு அரசு அரியலூர், கடலூர் மாவட்டங்களில் 15 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைப்பதற்கு அனுமதி கோரிய ஓ.என்.ஜி.சி.யின் விண்ணப்பங்களை ஜுன் 21 ம் தேதி  அன்று நிராகரித்துள்ளது. மீத்தேன் மற்றும் ஷேல் எரிவாயுத் திட்டங்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழ்நாடு அரசின் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 




இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா அஞ்சார்த்தலை கிராமத்தில் ஓ.என்.ஜி.சியின் பழைய எண்ணெய்க் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் புதிய கிணறு அமைக்கும் வேலையை ஓ.என்.ஜி.சி தொடங்கிருப்பது,  மீத்தேன், ஷேல் எரிவாயுக்கிணறுகள் அமைக்க அனுமதி இல்லை என்ற தமிழ்நாடு அரசின் அறிவிக்கப்பட்டுள்ள கொள்கைக்கு இது எதிரானது ஆகும். தமிழ்நாடு அரசு எவ்வித எண்ணெய்-எரிவாயுக் கிணறு அமைக்கவும் அனுமதிக்காது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில், முன்னதாக பெற்ற சுற்றுச்சூழல் அனுமதியைப் பயன்படுத்தி கூடுதல் ஆழத்திற்கு கிணறு அமைப்பது குற்றம் ஆகும். தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம்-2020 இயற்றப்படுவதற்கு முன்னதாக கிணறுகள் அனுமதி பெற்று இருந்தாலும், அது இதுவரை செயல்படுத்தப்படாமல் இருந்து. இப்போது நடைமுறைப்படுத்த முயற்சித்தால், அது புதிய கிணறாகவே கருதப்படும். எனவே, தமிழகஅரசின் அனுமதி இன்றி சட்டவிரோத எண்ணெய் கிணறு அமைக்கும் பணியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கிராமமக்கள் தெரிவித்துள்ளனர்.