திமுகவிற்கு எதிராக குரல் கொடுப்பதில் எதிர்க்கட்சியாக அதிமுக நன்றாக செயல்படுகிறது என திருவாரூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசியுள்ளார்
திருவாரூரில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது, ”திமுகவின் ஓராண்டு ஆட்சிக்காலம் என்பது தமிழக மக்களுக்கு சோதனை காலம் என அனைத்து விதத்திலும் நிரூபணமாகியுள்ளது. வீட்டு பெண்மணிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என கூறினார்கள். ஆனால் இதுவரை நிறைவேறவில்லை. அதேபோன்று சொத்து வரி உயர்வு நீட்தேர்வு விலக்கு உள்ளிட்ட பல வாக்குறுதிகளை திமுகவினர் கூறினார்கள். ஆனால் அதற்கு எதிர்மறையாக திமுகவினர் செயல்பட்டு வருகிறார்கள். மக்களை பாதிக்காத வகையில் நாங்கள் செயல்படுகிறோம் என திமுகவினர் கூறுகிறார்கள் ஆனால் மக்களை பாதிப்படைய செய்வது அவர்களின் நோக்கமாக உள்ளது. ஆகவே திமுக வருங்காலங்களில் இதற்கெல்லாம் பதில்சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
பத்தாண்டுகளுக்குப் பிறகு திமுகவிற்கு மக்கள் ஒரு வாய்ப்பு தந்தார்கள் திமுக எப்போதும் திருந்தாது அதனுடைய சுயரூபம் தற்போது வெளிப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் அனைத்திற்கும் மூடுவிழா நடத்துகிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தில் விடியல் ஆட்சி நடைபெறுகிறது என கூறினார். ஆனால் தமிழகத்தில் இருண்ட ஆட்சிதான் நடைபெற்று வருகிறது, அதுதான் உண்மை. தமிழகத்தில் அதிமுக எதிர்க்கட்சியாக சரியாக செயல்படுகிறதா என்ற கேள்விக்கு, தமிழகத்தில் அதிமுக எதிர்க்கட்சியாக நன்றாக செயல்படுகிறது. அதற்காக எங்களுடைய பங்காளிகளுக்கு ஆதரவாக பேசுகிறோம் என எடுத்துக் கொள்ளக்கூடாது. திமுகவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் போராட்டம் என அனைத்துக் கட்சிகளும் நடத்தி வருகிறது” என்றார்.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, அமமுக இணையுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ”உங்களுடைய யூகங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. தேர்தல் வெற்றி, தோல்வி வைத்துக்கொண்டு எங்கள் கட்சியை பாதிக்காது. இந்தித் திணிப்பை தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எந்த மொழியாக இருந்தாலும் அவர்கள் விருப்பப்பட்டு ஏற்கவேண்டும். இந்தித் திணிப்பை தற்போது உள்ள தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை” என்றார்.