தஞ்சாவூர்: ஒன்றிய அரசை கண்டித்து வரும் 11ம் தேதி நடக்க உள்ள கடையடைப்பு போராட்டத்தை ஒட்டி தஞ்சையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.


குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் சார்பில் குறுவை தொகுப்பு திட்டம் நடப்பாண்டும் செயல்படுத்தப்பட்டதால் வழக்கத்தை விட கூடுதல் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்றது. காவிரியில் கர்நாடக அரசு காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுக்காததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை நேரடி விதைப்பு மற்றும் நடவு பயிர்கள் சுமார் 2 லட்சம் ஏக்கர் வரை காய்ந்து கருகிவிட்டன 


எஞ்சிய குறுவை பயிரை பாதுகாத்திடவும், சம்பா சாகுபடி பணிகளைத் தொடங்கிடவும் தமிழ்நாட்டுக்கு, கர்நாடக அரசு கொடுக்க வேண்டிய காவிரி நீரை வழங்க வலியுறுத்தியும் காவிரி டெல்டா மாவட்டங்களில் பலகட்டப் போராட்டங்கள் நடந்தது. தற்போது கர்நாடக அணைகளில் 80 சதவீதத்துக்கும் அதிகமான தண்ணீர் உள்ள நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கக் கூடாது என கர்நாடகத்தில் இரண்டு முறை முழு அடைப்பு போராட்டத்தை பாஜக மற்றும் கன்னட அமைப்புகள் நடத்தின என்பதும் குறிப்பிடத்தக்கது. 


காவிரி டெல்டா மாவட்டங்களில் எஞ்சியுள்ள குறுவைப் பயிரை பாதுகாக்கவும், சம்பா சாகுபடி தொடங்கவும் உடனடியாக காவிரியில் மாத வாரியாக கொடுக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வலியுறுத்தி காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் வரும் 11 ஆம் தேதி முழு அடைப்பு மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடத்துவது என  முடிவு செய்யப்பட்டுள்ளது.




தமிழக அரசு பல முறை மத்திய அரசிடம் வலியுறுத்திய பின்பும் பாராமுகமாக செயல்படும் பாஜக  அரசை கண்டித்தும் நடைபெறவுள்ள இப்போராட்டத்துக்கு அனைத்து அரசியல் கட்சிகள், வணிகர் சங்கங்கள், அனைத்து விவசாய மற்றும் விவசாய தொழிலாளர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 


இந்நிலையில் வரும் 11ம் தேதி கடையடைப்பு மற்றும் மாபெரும் மறியல் போராட்டத்தை முன்னிட்டு தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் தஞ்சை மத்திய மாவட்ட கழக செயலாளர் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன்  தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.


இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக மாவட்ட பொருளாளர் எல்ஜி அண்ணா, திராவிட கழக மாவட்ட தலைவர் அமர்சிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர், விவசாய சங்க மாவட்ட துணை தலைவர் செந்தில்குமார், மதிமுக மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன், மாநகர பொருளாளர் துரைசிங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், தமிழக வாழ்வுரிமை கட்சி நகரச் செயலாளர் அண்ணாதுரை, விவசாய கட்சி பிரதிநிதிகள் கண்ணன், கோவிந்தராஜ் மற்றும் விவசாய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


இதில் வரும் 11ம் தேதி நடைபெற உள்ள கடை அடைப்பு மற்றும் மறியல் போராட்டத்திற்கு அனைத்து கட்சி மற்றும் விவசாய சங்கம் சார்பில் ஆதரவு தருவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.