திருச்சியிலிருந்து இந்தியாவின் தலைநகரமான டெல்லிக்கு விமான போக்குவரத்து இல்லாததால் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள், யாத்ரீகர்கள், மக்களவை மற்றும்

  மாநிலங்களவை உறுப்பினர்கள் என மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். திருச்சி விமான நிலையம் சிறந்த  உள்கட்டமைப்பு வசதிகளுடன் தமிழகத்தின் நான்காவது பெரிய நகரமாக சிறந்து விளங்குகிறது. திருச்சியை சுற்றி பாரம்பரியம் மற்றும் நவீனத்துவத்தின் சிறந்த கலவையாகும். புனித  ஸ்தலங்களான ஸ்ரீரங்கநாதசுவாமி கோயில், ஸ்ரீரங்கம்  போன்ற  கோபுர நுழைவாயில்கள், மற்றும் ஜம்புகேஸ்வரர்  அகிலாண்டேஸ்வரி கோயில், மற்றும் நவகிரக தலங்கள் என திருச்சியை சுற்றி சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது.




திருச்சிராப்பள்ளியில் இருந்து வாரணாசி மற்றும் டெல்லி வழியாக  விமான சேவையை இயக்குவதற்கான தேவை அதிகரித்து   வருகிறது. எனவே, திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்லி வழியாக வாரணாசிக்கு காலை 6-7 மணிக்கு புறப்பட்டு, மாலையில் வாரணாசியில் இருந்து திரும்புவதன் மூலம் தினசரி விமானச் சேவையை விரைவாக இயக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கு வேண்டும் என சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர்  ஜோதிராதித்ய  சிந்தியாவிடம் நேரடியாக  மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் என 13 எம்பிக்கள் நேரடியாக வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.


இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், திருச்சியிலிருந்து வாரணாசிக்கு விமான சேவை தொடங்க வேண்டும் என எம்பியுடன் கோரிக்கை வைத்தோம். அதன் பேரில் 13 எம்பிக்கள் மனு அளித்துள்ளனர். திருச்சியில், ஸ்ரீரங்கநாதர், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயில், சமயபரம் மாரியம்மன், மலைக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு தலங்கள் உள்ளன. இதே போல் தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் நவக்கிரஹ தலங்கள், புராதன கோயில்கள், சின்னங்கள், சோழர்காலத்து பதிவுகள், அவர்கள் வாழ்ந்த ஊர்கள், கட்டிட கலைக்கு புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன.




இதே போல் கணித மேதை ராமானுஜர், சில்வர் டங் சீனிவாசசாஸ்திரிகள் ஆகியோர் பயின்ற தென்னகத்தின் கேம்பிரிட்ஜ் என்றழைக்கப்படும் அரசு ஆடவர் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லுாரி மற்றும் கோயில்களில் நுணுக்கமான கலை நயத்துடன் சிற்பங்கள் இருப்பதால், கொரோனா தொற்று காலத்திற்கு முன்பு ஏராளமான வெளிநாடு, மாநித்தை சேர்ந்த கலைகளை பற்றி தெரிந்து கொள்பவர்கள் வந்து குறிப்பெடுத்து செல்வார்கள். இதே போல் மனிதர்கள் பாவத்தை தொலைப்பதற்காக காசிக்கு செல்வார்கள். காசியிலுள்ளவர்கள் பாவம் செய்தால், அதனை தொலைப்பதற்கு ராமேஸ்வரம் செல்வார்கள். ராமேஸ்வரத்தில் உள்ளவர்கள் பாவம் செய்தால், கும்பகோணம் மகாமககுளத்தில் புனித நீராடுவார்கள். கும்பகோணத்தில் உள்ளவர்கள் பாவம் செய்தால், கும்பகோணத்தில் இருந்தாலே புண்ணியம் சேரும் என்பது வாக்காகும்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, காசி, ராமேஸ்வரம் சென்று விட்டு வரும் வெளி மாநிலத்தவர்கள், கட்டாயமாக கும்பகோணத்திற்கு வந்து கோயில்களை தரிசனம் செய்து விட்டு, மகாமககுளத்தில் நீராடி விட்டு சென்று வந்தனர்.எனவே, மத்திய அரசு, திருச்சியில் இருந்து, வாரணாசிக்கு விமான சேவையை தொடங்கினால்,பக்தர்கள் சென்று வர வசதியாக இருக்கும் என்றார்.