அதிமுக தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்தை முன்னிட்டு,
தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிமுக பொன்விழா சிறப்பாக நடைபெற்றது. அதன் படி, பேராவூரணியில் விழா நடைபெற்றது. அதன் படி, அரசு பயணியர் மாளிகையிலிருந்து ஊர்வலமாகச் சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, எம்ஜிஆர், ஜெயலலிதா உருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்த பிறகு ரயில் நிலையம் அருகில், அன்னதானம் வழங்குவது என கட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது.
அந்த வகையில் நிகழ்ச்சி திட்டமிட்டு அதன்படி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது, முன்னாள் எம்எல்ஏவான கோவிந்தராசுவை மற்றொரு முன்னாள் எம்எல்ஏவான திருஞானசம்பந்தத்தின் ஆதரவாளரான நிர்வாகி ஒருவர் தகராறில் ஈடுபட்டு, அவர் மீது கையை வைத்துத் தள்ளியதாகக் கூறப்படுகிறது. இதனை பார்த்த, முன்னாள் எம்எல்ஏ கோவிந்தராசுவின் மகனும், பேராவூரணி தெற்கு ஒன்றியச் செயலாளருமான இளங்கோ அந்த நிர்வாகியை அடித்தார். இது குறித்து, பேராவூரணி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடைபெற்று வருகிறது. பட்டுக்கோட்டை டி.எஸ்.பி செங்கமலக்கண்ணன் இது குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றார்.
இது குறித்து பேராவூரணி அதிமுகவினர் கூறுகையில்,
கோவிந்தராசு, எம்ஜிஆர் காலத்திலேயே, பேராவூரணியில் முதன்முறையாக கட்சி கொடியேற்றினார். மிகவும் விசுவாசமாகவும் இருக்கின்றார். ஆனால் தமாகவில் இருந்த வந்த திருஞானசம்பந்தம், கோவிந்தராசுவையும், மகன் இளங்கோவையும் கட்சியை விட்டு ஒதுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் குளறுபடிகளை செய்து வருகின்றார். பேராவூரணி வடக்கு, தெற்கு ஒன்றியச் செயலாளர்கள் துரை.மாணிக்கம், இளங்கோ ஆகியோர் அதிமுக பொன் விழாவுக்கான ஏற்பாட்டைச் செய்திருந்தனர். நிகழ்ச்சியும் திட்டமிட்டபடி நடத்தப்பட்டது.
முன்னாள் எம்.எல்.ஏ கோவிந்தராசு, தலைமையில், ஊர்வலம் செல்ல அதிமுக நிர்வாகிகளுடன் தயார் நிலையில் இருந்தது. அதே நேரத்தில் சுற்றுலா மாளிகைக்கு எதிரிலேயே உள்ள மண்டபம் ஒன்றில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பேராவூரணி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்த திருஞானசம்பந்தம், தலைமையில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் தனியாக, தனிப்பலத்தை காட்டும் விதமாக, ஊர்வலம் செல்லத் தயாராக இருந்தார்.
இதனையறிந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள், கோவிந்தராசு மற்றும் திருஞானசம்பந்தம் ஆகியோருடன் பேசி, சமாதானம் செய்தனர். அதன் பின்னர், இருதரப்பினரும் ஒன்றாகச் சேர்ந்து ஊர்வலம் புறப்பட்டனர். ஊர்வலத்தில் திருஞானசம்பந்தம், கோவிந்தராசுவை விட வேகமாக முன்னே சென்று கொண்டிருந்தார். அதனை செல்போனில் படம் எடுப்பதற்காக, நகர தகவல் தொழில்நுட்பப் பிரிவின் செயலாளர் கருணாகரன், கூட்டத்துக்குள் சென்றார். அப்போது கோவிந்தராசுவை இடிப்பது போல் சென்றார். இதில் தடுமாறிய கோவிந்தராசு, தம்பி மெதுவா போ என்று கூறினார்.
ஆனால் கருணாகரன், கோவிந்தராசுவை தாக்குவது போல் சென்று, சட்டையை பிடித்து இழுத்து தகராறில் ஈடுபட்டார். இதனை கவனித்த இளங்கோ, தனது தந்தையை, தாக்க முயன்ற கருணாகரனை தாக்கினார். பலத்த காயமடைந்த கருணாகரன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் நிகழ்ச்சி முடிந்த பிறகு, முன்னாள் எம்எல்ஏ கோவிந்தராசு, செய்த தவறுக்கு, மன்னிப்பு கேட்பதற்கு, கருணாகரனை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு சென்றார்.
ஆனால் கருணாகரன், மீண்டும் தகராறில் ஈடுபட்டார். பேராவூரணி காவல் நிலையத்தில் இருதரப்பினரும் புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்திடம் தெரிவித்தனர். அதிமுக 50 ஆண்டுக்கால வரலாற்றில் பேராவூரணியில், இது போன்ற வெளிப்படையான பிரச்னை, மோதல்கள் எதுவும் நடந்தது இல்லை. இந்த கோஷ்டிப்பூசலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான நடவடிக்கையை வைத்திலிங்கம் எடுக்க வேண்டும், தவறும் பட்சத்தில், பேராவூரணியில் அதிமுகவின் நிலை கேள்வி குறியாகும் என்றனர்.