தஞ்சாவூர்: சம்பா பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை வரும் டிச.10ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜனநாயக விவசாயிகள் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இரா.அருணாச்சலம் தமிழக அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகமும் நெல் சாகுபடிதான் முக்கியமானதாகும். ஒரு சில பகுதிகளில் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. நெல் அறுவடை முடிந்த பின்னர் உளுந்து, பயறு போன்றவற்றையும் விவசாயிகள் சாகுபடி செய்வது வழக்கம். கரும்பு, நிலக்கடலை, உளுந்து, சோளம் என்று பயிரிடப்பட்டாலும் அதிக பரப்பளவில் நெல் சாகுபடியைதான் விவசாயிகள் மேற்கொள்கின்றனர். நெல் அதிகம் விளையும் தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி பணிகள் நடந்து வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதிகளில் நடப்பாண்டில் சாகுபடி செய்யப்பட்ட குறுவைப் பயிர் போதிய தண்ணீர் வரத்தின்றி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏறத்தாழ 5 லட்சம் ஏக்கர் பாழாகி உள்ளது. இதனால் விவசாயிகள் கடனாளியாகவும் ஆகி உள்ளனர். இந்நிலையில் சம்பா பருவத்திற்காக போதிய தண்ணீர் கிடைக்காததால், சம்பா பருவ சாகுபடி தாமதமாக செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சம்பா பருவத்திற்கான பயிர் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15 வரை செய்யலாம் என அரசு அறிவித்தது. பயிர் காப்பீடு செய்வதற்கான சிட்டா அடங்கல் பெறுவதற்கு பண்டிகை விடுமுறை மற்றும் நிர்வாக காரணங்களினால் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர். தற்போது மழை பெய்து வருவதாலும், காவிரியில் தண்ணீர் ஓரளவு வருவதை நம்பியும் விவசாயிகள் சம்பா சாகுபடிக்கான வேலைகளின் இறங்கி உள்ளனர்.
இந்நிலையில் நவம்பர் 15 ம் தேதி பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை மேலும் ஒரு மாதம் நீட்டித்து தர வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை வைத்த நிலையில் பயிர் காப்பீட்டிற்கான தேதி நவம்பர் 22 வரை செய்து கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்த காலக்கெடு நீட்டிப்பு அறிவிப்பிற்கு ஜனநாயக விவசாயிகள் சங்கம் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். தற்போதும் பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் சிட்டா- அடங்கல் பெறுவதற்கு இயலாமல் அலைந்து கொண்டு உள்ளனர்.
மழை, வெள்ளம் போன்ற பல்வேறு காரணங்களினாலும் பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நவ.22 ம் தேதியிலிருந்து டிசம்பர் 10 ஆம் தேதி வரை நீட்டித்துத்தர வேண்டும். பயிர் காப்பீடு செய்ய தனியார் நிறுவனங்களை தவிர்த்து, எல்ஐசி உள்ளிட்ட அரசு இன்சூரன்ஸ் நிறுவனங்களில் வரும் ஆண்டிலிருந்து பயிர் காப்பீடு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வரையும், தமிழ்நாடு அரசையும் ஜனநாயக விவசாயிகள் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.