வேளாண் சார்ந்த தொழிற்சாலையை எதிர்பார்த்து காத்திருக்கும் திருவாரூர் விவசாயிகள்...!
’’கடைமடை மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயம் பொய்த்ததால் திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர் மாவட்டங்களுக்கு வேலைத்தேடி சென்று கொண்டு இருக்கின்றனர்’’
Continues below advertisement

வேளாண் பணிகளில் விவசாயிகள்
திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடியே பிரதான சாகுபடி ஆக உள்ளது. ஆண்டுதோறும் 8 லட்சம் ஏக்கர் பரப்பளவில் டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 4 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். காவிரி நீர் பிரச்சினை காரணமாக கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சாகுபடி செய்துவரும் பரப்பளவு ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே வருகிறது.
இதற்கு முக்கிய காரணம் காவிரி நீர் பிரச்சினை, மற்றும் பருவமழை பற்றாக்குறை, இதன் காரணமாக விவசாயத்தை விட்டுவிட்டு மாற்றுத் தொழில்களையும் வேலை வாய்ப்புகளையும் தேடி இளைஞர்களும் விவசாயிகளும் சென்று வருகின்றனர். குறிப்பாக கடைமடை மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் தொழில் நகரங்களான திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர் போன்ற மாவட்டங்களுக்கு வேலைக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள். இதனால் விவசாயத்தில் ஈடுபட்டு வரும் விவசாய தொழிலாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் வேளாண் சார்ந்த தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் என பல ஆண்டுகளாக திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தமிழ்நாடு அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். வேளாண் சார்ந்த தொழிற்சாலைகளால் திருவாரூர் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் படித்த பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதால் வேலை தேடி வெளிமாவட்டங்களுக்கு செல்ல முடியாத நிலை உருவாகும். ஆனால் இதுவரை எந்த அரசும் இதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை என விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். கடந்த 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இருந்தபோது அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருவாரூர் வருகை தந்திருந்த பொழுது திருவாரூர் மாவட்டத்தில் வேளாண் சார்ந்த தொழிற்சாலை அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தவுடன் அந்த அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு, முதன்முதலாக வேளாண்மைக்கு என்று தனி பட்ஜெட் வெளியிடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாளைய தினம் தமிழ்நாட்டின் முதல் வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேரவையில் தாக்கல் செய்கிறார்.
தமிழ்நாடு அரசு முதன்முதலாக தாக்கல் செய்யவுள்ள வேளாண் பட்ஜெட்டில் திருவாரூர் மாவட்டத்தில் வேளாண்மை சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வரும் நிலையில், வேளாண் சார்ந்த தொழிற்சாலைகளை அமைப்பதற்கான அறிவிப்பு வேளாண்மை பட்ஜெட்டில் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்புடன் விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.