நீதிமன்றங்களில் அம்பேத்கர் படத்தை நீக்க வேண்டும் என அனைத்து நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் சுற்றறிக்கை அனுப்பி இருப்பதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நீதிமன்ற வளாகங்களில் ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றகளில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவர் உருவப்படங்களை தவிர மற்ற யாருடைய படங்களையும் வைக்கக் கூடாது என அனைத்து நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. 




டாக்டர் அம்பேத்கர் மற்றும் சம்மந்தப்பட்ட வழக்கறிஞர் சங்கங்களின் மூத்த வழக்கறிஞர்கள் ஆகியோரின் உருவப்படங்களைத் திறக்க அனுமதி கோரி பல்வேறு வழக்கறிஞர் சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை நிராகரித்து, கடந்த ஏப்ரல் 11 -ஆம் தேதி நடத்தப்பட்ட உயர் நீதிமன்ற அனைத்து நீதிபதிகள் அடங்கிய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும் உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் எம்.ஜோதிராமன் இந்த சுற்றறிக்கை அனுப்பிருந்தார்.




அதேபோன்று, அம்பேத்கரின் உருவப்படத்தை அகற்ற ஆலந்தூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தை வற்புறுத்துமாறு காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட நீதிபதிக்கு கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் 27-ம் தேதி  நீதிமன்றம் உத்தரவிட்டு, புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றங்களில் அவரது படத்தை வைக்கக் கோரிய கடலூர் வழக்கறிஞர் கோரிக்கையை நிராகரித்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்ட நீதித்துறை தலைவர்களும் அனைத்து நீதிபதிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும், அதை மீறுவோர் மீது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் தகுந்த புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.




மேலும்  அந்த சுற்றறிக்கையில் கடந்த காலங்களில் தேசிய தலைவர்களின் படங்கள், சிலைகள் வைக்கப்பட்டதால் சட்ட - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டதை சுட்டிக்காட்டி, மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவர் படங்களை தவிர்த்து வேறு யார் படங்களை வைக்க அமனுதிக்கக் கூடாது என நீதிபதிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், மீறுபவர்கள் மீது பார் கவுன்சில் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.




இந்நிலையில், அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய டாக்டர் அம்பேத்கரின் படத்தை நீதிமன்றங்களில் இருந்து அகற்றக்கோரி அனுப்பப்பட்ட உயர்நீதிமன்ற சுற்றறிக்கையை கண்டித்து மயிலாடுதுறையில் வழக்கறிஞர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்கத் தலைவர் வேலுகுபேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாயூரம் வழக்கறிஞர் சங்கம் மற்றும் மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு உயர்நீதிமன்ற சுற்றறிக்கைகையக் கண்டித்து பேசி முழக்கங்களை எழுப்பினர்.




இது போன்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவாயிலில் சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநில துணை செயலாளர் ராஜேஷ் தலைமையில் உயர்நீதிமன்ற பதிவாளரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றங்களில் உள்ள சட்ட மாமேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் திரு உருவ படத்தை அகற்ற சுற்றறிக்கை விடுத்த உயர்நீதிமன்ற பதிவாளை கண்டித்தும் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அம்பேத்கர் உருவ படத்தை அகற்ற விடுத்த சுற்றறிக்கையை திரும்ப பெறவேண்டும்.இல்லையேன்றால் அடுத்தக்கட்ட பெரிய போராட்டங்களை நடத்தப்படும் என தெரிவித்தனர்.