தமிழ்நாட்டில் காவலர்களால் அவ்வப்போது பொதுமக்கள் தாக்கப்படும் சம்பவம் சமீபகாலமாக தொடர்கதையாக இருந்து வருகிறது. அவ்வாறு தாக்கப்படும் காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், காவலர்கள் பொதுமக்களை சட்டத்திற்கு புறம்பாக தாக்கும் நிகழ்வு இன்றளவும் நின்றபாடில்லை. மேலும் காவலர்களின் தாக்குதல்களால் பலர் உயிரிழந்த சம்பவங்களும் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது. இதனைக் குறைப்பதற்காக அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள சூழலிலும் காவல் நிலைய காவலர்கள் சிசிடிவி கேமராவை திசை திருப்பி வைத்து விடும் சிசிடிவி கேமராவை ஆப் செய்துவிட்டும் பொதுமக்களை தாக்கும் சம்பவம் நடந்தேறி வருகிறது. அதற்கு உதாரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் சட்டக் கல்லூரி மாணவர் ஒருவரை முக கவசம் அணிய வில்லை என்பதற்காக காவல் நிலையம் அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கிய சம்பவம் நடந்தேறியது. இச்சம்பவம் குறித்து தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது மயிலாடுதுறையில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தேறியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா நல்லாடை பனங்குடி பகுதியை சேர்ந்தவர் சேகர் என்பவரின் 25 வயதான மகன் முருகன். இவரது தாய்மாமன்கள் பழனிவேல், சத்தியராஜ் ஆகிய இருவர்களுக்குள் சொத்து பிரச்னை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பெரம்பூர் காவல் நிலையத்தில் நேற்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த நேரத்தில் முருகனும் அவரது தாயார் உமாவும் காவல்நிலையத்தில் இருந்தபோது தாய்மாமன் சத்தியராஜ் முருகனை திட்டியுள்ளார்.
அதற்குப் பதில் கூறிய முருகனை சத்தியராஜிக்கு ஆதரவாக பெரம்பூர் காவல் நிலையத்தில் இருந்த காவலர் ஒருவர் முருகனை தலையில் அடித்து சட்டையைப்பிடித்து தனி அறைக்குள் இழுத்துச் சென்று சகட்டுமேனிக்குத் திட்டியும், அடித்தும் பைக்கின் சாவியை பிடுங்கிக்கொண்டு காவல்நிலையத்தில் அமர வைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்ட முருகனின் தாய் தன்மகனை விட்டுவிடுமாறு காவலர்களின் காலில் விழுந்து கெஞ்சிய நிலையில் பெரம்பூர் காவல்நிலை காவலர்கள் தாயாருடன் முருகனை வெளியே அனுப்பியுள்ளனர்.
இதனால் மிகுந்த மனஉளைச்சல் ஆளான முருகன் மயக்கமடைந்து உள்ளார். அதனை தொடர்ந்து முருகனை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் சொத்து பிரச்னையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், ஒருவருக்கு ஆதரவாக செயல்பட்டு தன்னை தாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாதிக்கப்பட்ட முருகன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, பெரம்பூர் காவல்நிலைய காவலர்களிடம் கேட்டதற்கு, சம்பந்தப்பட்ட நபரை காவலர்கள் யாரும் தாக்கவில்லை என்றும், தேவையின்றி காவல் நிலையத்தில் பேசியதற்காக எச்சரிக்கை மட்டுமே செய்து அனுப்பியதாகவும் விளக்கம் அளித்தனர்.