தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி பேசும் கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், சாதி குறித்து அவர் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


"மெட்ராஸின் முதல் பூர்வீக குரல்: காசுலூ லக்‌ஷ்மிநரசு செட்டி" புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் ரவி, "சுதந்திரத்திற்காக தன் 25 ஆவது வயதில் இன்னுயிரை ஈந்த சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனுக்கு என் மரியாதையையும் வணக்கத்தையும் உரித்தாக்குகிறேன்.


சலசலப்பை ஏற்படுத்தும் ஆளுநர் பேச்சு: 19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் நமது தாய்வழி கல்வி நிலையங்களை மூடிய போது, பல்வேறு கல்வி நிறுவனங்களை தொடங்கி கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டவர் வள்ளலார்" என அவரது சேவையை நினைவு கூர்ந்தார்.


சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாதியின் வரலாறு குறித்து விரிவாக பேசிய அவர், "1823 ம் ஆண்டு மெட்ராஸ் மகாணத்தில் உள்ள அனைத்து ஆட்சியருக்கும் சுற்றறிக்கை அளிக்கப்பட்டு நமது தாய் வழி கல்வி ஆராயப்பட்டது. அப்போதே ஜாதி, மத, பாலின பாகுபாடின்றி கல்வி கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.


தமிழ், கன்னடம், மலையாளம் சமஸ்கிருதம் என தனித்தனியாகவும் அவர் அவர்களுக்கு ஏற்றார் போல் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டுள்ளன. இதற்கான ஆதாரம் இந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. 1820களில் நம் சமூகத்தில் இருந்த கல்வி முறையில் மாணவர்களுக்கு கட்டணமில்லை.


"ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு சாதி இல்லை" ஆசிரியர்களுக்கு அவர்கள் வாழ்வதற்கு தேவையான உதவிகள் மட்டுமே சமூகத்தால் செய்து தரப்பட்டன. கல்வி முறை சிறப்பாக இருந்தது. மொழி, இசை,  ஓவியம் என பாடங்கள் கற்பிக்கப்பட்டன.


பிராமண, சத்திரிய, வைஷ்ணவ, சூத்திர என 4 பிரிவுகள் மட்டுமே இருந்தன. இதைத் தவிர முஸ்லிம்கள் இருந்தார்கள். ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு சாதி இருந்ததில்லை. புண்ணியம் என்று கருதப்படும் கல்வி கற்பிக்கும் தொழில் வணிகமாக அன்று இல்லை.


பிராமணர்கள் தான் பெரும்பாலும் ஆசிரியர்களாக இருந்தார்கள். பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்த அவர்கள் தான் கல்வி கற்றுக் கொடுத்தார்கள். ஆங்கிலேயர்களால் இந்த கல்விமுறை திட்டமிட்டு அழிக்கப்பட்டது.


சிறப்பாக இருந்த நம் கல்விமுறையை ஆங்கிலேயர்கள் ஆய்வு செய்து திட்டமிட்டு அழித்தார்கள். 1823ஆம் ஆண்டு நமது கல்வி நிலையங்களை ஆராய்ச்சி செய்த போது 630 பள்ளிகள், 69 கல்லூரி தரத்திலான பள்ளிகள் செயல்பட்டுள்ளன" என்றார்.


சமீபத்தில், மகாத்மா காந்தி குறித்து பேசிய ஆளுநர், "நாம் சுதந்திரம் பெறுவதற்கு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை.  நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜியே முக்கிய காரணம். இஸ்லாமிய தலைவர்களின் எண்ணப்படி 1947 இல் நாடு இரண்டாகப் பிரிந்தது. வேலு நாச்சியார், வ.உ.சி. போன்றவர்களைப் போல நேதாஜியின் தியாகமும் போற்றப்பட வேண்டும்” எனப் பேசி இருந்தார்.


அதற்கு முன்பு, திருவள்ளுவர் குறித்து பேசிய ஆளுநர், "ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த, மதிப்புக்குரிய கவிஞரும், சிறந்த தத்துவஞானியும், பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.