கும்பகோணத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசு பேருந்தில் மதுபோதையில் வந்த காவலர் சக பெண் பயணியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்ட நிலையில் அதனை கண்டித்த நடத்துனர் மற்றும் சக பயணிகளிடம் நான் போலீஸ் என்னை ஒன்றும் செய்ய முடியாது என தகாத வார்த்தைகளால் கூறி தகராறில் ஈடுபட்டதோடு பேருந்தின் முன் அமர்ந்து போராட்டம் செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சையில் இருந்து கும்பகோணத்திற்கு

  இரவில் வந்த அரசு பேருந்தில் டிப்டாப்பாக தோளில் பேக்கை மாட்டிக்கொண்டு பயணம் நபர் அந்தப் பேருந்தில் பயணம் செய்தால் பெண் பயணியிடம் உரசியபடி சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.


இது குறித்து அந்த பெண், நடத்துனரிடம் புகார் அளிக்கவே அவர் அந்த நபரை சத்தம் போட்டு, கேட்ட போது அவர் மதுபோதை தலைக்கேறிய நிலையில் நின்றிருப்பது தெரியவந்தது. பின்னர் அவரை  கண்டித்து சென்றார். பேருந்து கும்பகோணம் வரும் வரை மீண்டும் மீண்டும் அந்த நபர் அந்தப் பெண்ணிடம் சில்மிஷத்தை தொடர்ந்துள்ளார். ஆனால் மதுபோதையில் இருந்த அந்த நபரை கண்டிக்க முடியாமல் தவித்துள்ளார். அதனை பார்த்த மற்ற  பயணிகள் அந்த நபரை சத்தம் போட்டனர். இதையடுத்து பேருந்தை நிறுத்தி அந்த நபரை கீழே இறங்குமாறு நடத்துனர் கூறினார். கீழே இறங்க மறுத்த அந்த நபர் தான் ஒரு போலீஸ் எனவும் என்னை ஒன்றும் செய்ய முடியாது ஒழுங்காக என்னை கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இறக்கி விடுமாறு தோரணையுடன் தெரிவித்துள்ளார்.



இதனால் ஆத்திரமடைந்த நடத்துனர்,  கும்பகோணம் நான்கு வழிச் சாலையின் குறுக்கே பேருந்தை நிறுத்தி இப்போது கீழே இறங்க வில்லை என்றால் பேருந்தை எடுக்க மாட்டோம் என கூறினர். பின்னர்  பஸ்சில் இருந்த மற்ற  பயணிகள் அந்த நபரை சத்தம்போட்டு கீழே இறக்கினர். அப்போது  பேருந்து முன் அமர்ந்து அந்த நபர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார். போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் இந்த சம்பவம் நடந்ததால் நான்கு வழிச்சாலையில் முழுவதும் நீண்ட தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் மற்றும் கும்பகோணம் மேற்கு போலீசார் மதுபோதையில் இருந்த அந்த நபரை இருசக்கர வாகனத்தில் நடுவிலே ஏற்றிக் கொண்டு முன்னும் பின்னும் காவலர்கள் அமர்ந்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.


அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் தன்னுடைய கர்ச்சீப் கீழே விழுந்து விட்டது அதனை குனிந்து  எடுக்கும் போது தெரியாமல் வந்த பெண் மீது கை பட்டு விட்டது என உளறியபடி கூறியுள்ளார். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காவலராக பணியாற்றி வரும் தாஸ் எனவும் பணி முடிந்து மது அருந்திவிட்டு பேருந்தில்  பயணம் செய்ததும் தெரியவந்தது. ஆனால் அவர் மீது யாரும் புகார் அளிக்காததால் அவரை போலீசார் அனுப்பி வைத்து விட்டதாக தெரிவித்தனர்.



அவரை பற்றி போலீசாரிடம் விசாரித்த போது, இதனை செய்தியாக பிரசுரிக்க போகீறீர்களா, அந்த நபர் யார் என்று தெரிய வில்லை. எஸ்பி அலுவலகத்தில் எந்த பிரிவில் உள்ளார் என்று தெரியவில்லை. இது போன்ற தகவல்கள் எங்களுக்கு வரவில்லை என அவரை காப்பாற்றும் விதமாக பதில் கூறினர். இந்நிலையில் இந்த செய்தி ஏபிபி நாடு செய்தி தளத்தில் வெளி வந்தது. இதனையடுத்து உளவுப்பிரிவு போலீசார், இது குறித்து விசாரித்து, தங்களுடைய மேலதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து, தஞ்சை எஸ்பி ரவளிப்பிரியா, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் பேரில், தஞ்சை எஸ்பி அலுவலகத்தில் அமைச்சு பணியாளரான இளநிலை உதவியாளராக  வேலை செய்து வந்த ஜோசப்டென்னீஸனை பணியிடை நீக்க எஸ்பி உத்தரவிட்டார்.



இது குறித்து போலீசார் கூறுகையில், கும்பகோணம் பஸ்சில் நடந்த சம்பவத்தை, கும்பகோணம் மேற்கு போலீசார் மற்றும் தனிப்பிரிவு போலீசார், தஞ்சை எஸ்பிக்கு தகவல் கொடுக்காமல் மறைத்து விட்டனர். இது குறித்து ஏபிபி நாடு  செய்தி தளத்தில் வந்த செய்தியை வைத்து, விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எஸ்பிக்கு தகவல் கொடுக்காத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.