நெல் கொள்முதலில் விவசாயிகளை பாதிக்கும் ஆன்லைன் பதிவை ரத்து செய்ய வலியுறுத்தி அதன் அரசாணை நகலை காவிரி உரிமை மீட்புக் குழுவினர் இன்று தஞ்சையில் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் .தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தஞ்சை முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமை வகித்தார்.
போராட்டத்தின் போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் செயல்படும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விளைவித்த நெல்லை விற்பனை செய்ய அரசு ஆன்-லைன் பதிவை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் விவசாயிகள் உரிய நேரத்தில் நெல்லை விற்பனை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே ஆன்-லைன் பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக காவிரி உரிமை மீட்புக் குழுவினர் ஆன்-லைன் பதிவு முறையை ரத்து செய்ய வலியுறுத்தி அதன் அரசாணை நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், காவிரி உரிமை மீட்புக் குழுவினர் கலந்து கொண்டு கைதாகினர்.
காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் நிருபர்களிடம் கூறுகையில்,இணையதளத்தில் முன் பதிவு செய்து,அவர்கள் குறிப்பிட கூடிய நாளில் அவர்கள் குறிப்பிடம் கொள் முதல் நிலையத்தில் நெல்லை விவசாயிகள் கொண்டு போய் விற்பனை செய்ய வேண்டும் என்று கொண்டு வந்திருக்கின்ற இந்த ஏற்பாடு, இந்திய அரசின் ஏற்பாடு, தமிழக அரசு அதனை செயல்படுத்துகின்றது. இது விவசாயிகளுக்கு பெரும் சுமையாக இருக்கின்றது.விவசாயிகள் இதற்கு அஞ்சி, தனியாரிடம் அடிமாட்டு விலைக்கு நெல்லை விற்ககூடிய அவலம் அன்றாடம் நடந்து கொண்டிருக்கின்றது. கொள்முதலின் கொள்கையே தோற்று போய் விட்டது. இந்த கொள் முதல் கொள்கை தோற்கடித்தது ஆட்சியாளர்கள் தான்.
துன்பம் தாங்காமல் தனியாரிடம் விற்பனை செய்வது, அங்கு இங்கு கடன்களை வாங்கி விவசாயம் செய்து விஏஒவிடம் பதிவு செய்து, அவர்கள் சொன்ன தேதியில் போக முடியாவிட்டால், இந்த நெல்லை எங்கு வைத்திருக்க முடியும். உடனடியாக இணையதள பதிவு என்ற கொடூர விதிமுறைகளை நீக்கி, கடந்த காலங்களில் இருந்தது போல் நேரடி நெல் கொள் முதல் செய்ய வேண்டும். அதற்கு ஊழியர் பற்றாகுறை இருக்கின்றத என்றால், புதியதாக அதிக ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி நகலை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். எனவே, தமிழக அரசு இதனை இப்போராட்டத்தை பதிவு செய்து, டெல்லியிலுள்ள மத்திய அரசுக்கு, தமிழகத்திற்கு இது பொருந்தாது, நெல்லை நேரடியாக கொள் முதல் செய்கின்றோம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் சொல்ல வேண்டும். அதனை தமிழக அரசு செயல்படுத்திட வேண்டும் என்றார்.