மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி ஆகிய இரண்டு நகராட்சிகள் உள்ளன. இந்நிலையில் சீர்காழி நகராட்சி மீது தொடர்ந்து நாளுக்கு நாள் பல்வேறு குற்றச்சாட்டுகள் பொதுமக்களிடம் இருந்தும், நகராட்சி சார்ந்த  பணியாளர்களிடம் இருந்தும் எழுந்து வருகிறது


சீர்காழி நகராட்சியில் ஆளும் கட்சியை சேர்ந்த நகர மன்ற தலைவராக திமுகவை சேர்ந்தவர்கள் பதவி வகித்து வருகின்றனர். இந்த சூழலில் சீர்காழி நகராட்சி மேம்படும் என எண்ணிய நிலையில், நாளுக்கு நாள் சீர் கெட்டு வருவதாக பொதுமக்கள் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர். ‌




இது குறித்து சீர்காழி நகராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ’’கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்த காரணத்தினால் நகராட்சி நிர்வாகம் ஆணையரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. அரசு அலுவலரான ஆணையர் இப்பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை முறையாக பூர்த்தி செய்து வந்தார்கள். ஆனால் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகர மன்ற தலைவர் மூலம் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு ஒவ்வொரு பணிகளும் நடைபெறும் சூழல் நிலவுவதால், தற்போது எந்த ஒரு அடிப்படை தேவையும் சீர்காழியில் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.


குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தெரு மின்விளக்கு பிரச்சனை, குடிநீர் பிரச்சினை, சாலை வசதி, எல்லாவற்றுக்கும் மேலாக தூய்மைப் பணியான குப்பைகள் அள்ளும் பணியும் சரிவர நடைபெறாமல் பல இடங்களில் சுகாதார சீர்கேடும் நிலவி வருகிறது.



இந்த நிலையில்,  பல ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்கி வரும் சீர்காழி அம்மா உணவகம் முற்றிலும் பராமரிப்பு இன்றி பொதுமக்களுக்கு சரிவர உணவு வழங்க முடியாத சூழல் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது.  இதனால் பொதுமக்களுக்கு முறையாக உணவு வழங்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாக அம்மா உணவக ஊழியர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் இந்த நிலை தொடரும் பட்சத்தில் அம்மா உணவகத்தை பூட்டிவிட்டு அதன் சாவியினை நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.  இது குறித்து ஏபிபி நாடு இணையதளத்தில் செய்தி வெளியானது.




அதில், கடந்த சில மாதங்களாக காலை உணவான இட்லி தாயார் செய்ய மாவு அரைக்கும் கிரைண்டர் பழுதால் இட்லி தாயார் செய்ய முடியாமல் காலை உணவுக்காக அம்மா உணவகத்தை தேடிவரும் ஏழை எளிய மக்கள் ஏமாற்றத்துடன் பசியுடன் திரும்பி செல்வதும் மதியம் உணவு சமைக்க அடுப்புகள் பழுதால் ஒரேயொரு அடுப்பை மட்டும் வைத்து போதுமான அளவு உணவு தாயார் செய்யமுடியாத நிலையில் மதிய உணவும் பலருக்கு தடை படுவது குறித்து கூறப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி சமையலுக்கு தேவையான முக்கிய காரணியான எரிபொருள் சிலிண்டர் இணைப்பு பகுதியும் பழுதடைந்து அதனையும் பயன்படுத்த முடியாமல் அங்குள்ள பணியாளர்கள்  அவதிக்குள்ளானதும். குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்களும் பழுதுபட்டு பயனற்று காணப்படுவதும் கூறப்பட்டது.




இதுகுறித்த செய்தியினை ஏபிபி நாடு இணையதளத்தில் செய்தியாகவும் ஏபிபி நாடு முகநூல் பக்கத்தில் நேரலையும் செய்த நிலையில் அதன் எதிரொலியாக அம்மா உணவகத்தில்  புதிதாக இரண்டு கிரைண்டர்கள், கேஸ் அடுப்புகள், கேஸ் இணை குழாய்கள் மாற்றப்பட்டு குறைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டுள்ளன. இதனால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் ஏபிபி நாடு செய்தி நிறுவனத்திற்கு தங்கள் நன்றியினை தெரிவித்தனர். இனி சிரமம் இன்றி பணி செய்ய முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.