ஒவ்வொரு அனுபவமும் நமக்கு ஆசிரியர்கள்தான். அவை கற்று தரும் பாடங்கள் பட்டைத் தீட்டிய வைரமாக நம்மை மாற்றும். தோல்வியை எப்போது மனதார ஏற்றுக்கொண்டு அதில் செய்த தவறுகளை திருத்திக் கொள்ள முயல்கிறோமோ அப்போதே வெற்றி நம்மை நோக்கி ஓடி வரும்.
எதிர்கால வாழ்க்கையின் வெற்றியின் ரகசியம் முயற்சி என்ற தூண்டுகோல்தான் உள்ளது. மேற்கொள்ளும் செயல்களிலும் பொறுமை இழக்காமல் முழு நம்பிக்கையுடன் செயல்பட்டால், சோதனைகள் அனைத்தும் சாதனைகளாக மாறும். அதுபோல்தான் தஞ்சாவூர் அரசர் தொடக்கப்பள்ளி 5ம் வகுப்பு மாணவி திவ்யதர்ஷினி சிலம்பத்தில் அசர அடிக்கும் சாதனைகள் செய்து மலைக்க வைத்துள்ளார்.
மாணவியின் அம்மா அபிராமி. அப்பா கார்த்திக். கடந்த 2 ஆண்டுகளாக சிலம்பம் கற்று வரும் மாணவி திவ்யதர்ஷினியின் சிலம்ப பயிற்சியாளர் ராஜராஜ சோழன் சிலம்பம் போர்க்கலை பாசறை ஆசான் அருண். மாணவியின் கரங்களில் சுற்றும் சிலம்பத்தின் வேகம் அசாத்தியமாக உள்ளது. திடமான மனதிருந்தால் சாதனைகள் பல படைக்கலாம். அது மாணவி திவ்யதர்ஷினியிடம் நிறைய உள்ளது. கடந்த 2022ம் ஆண்டு தஞ்சையில் மாவட்ட அளவில் நடந்த சிலம்பம் சாம்பியன் ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று அனைவரையும் தன் பக்கம் பார்க்க வைத்தார்.
அதேபோல் கோவையில் மாநில அளவில் நடந்த சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து விருதும், சான்றிதழும் பெற்று அசத்தி உள்ளார்.
சிறுவயதில் சாதனை படைப்பது என்பது சிகரம் ஏறி வெற்றிக் கொடி நாட்டுவதற்கு சமம். அதுபோல்தான் சிலம்பத்தில் அபார சாதனை செய்வது மட்டுமல்ல. படிப்பிலும் நான் கெட்டி என்பது போல் 2022-2023 பருவத் தேர்வில் பள்ளியில் முதல்நிலை பெற்று சான்றிதழ் பெற்றுள்ளார். தஞ்சையில் பொது நூலகத்துறை நடத்திய கோடை கால கொண்டாட்டம் விழாவில் சிலம்பம் செய்து காட்டி சான்றிதழ் பெற்றுள்ளார். இந்த சாதனைகளுக்கு எல்லாம் வைர கிரீடம் வைப்பது போல் புதுச்சேரியில் இடைவெளியின்றி ஒரு மணி நேரம் ஒரு நிமிடம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி இந்தியா புக் ஆப் வேர்ல்ட் ரிக்காட்ஸில் இடம் பிடித்து தன் பள்ளிக்கு பெரிய பெருமையை தேடி தந்துள்ளார்.
கண்களை கட்டிக் கொண்டு நடப்பதே சிரமம். ஆனால் மாணவி திவ்யதர்ஷினி திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடந்த சிலம்பம் போட்டியில் கண்ணை கட்டியபடியே 15 நிமிடம் சிலம்பம் சுற்றி கோப்பை மற்றும் விருதை பெற்று சாதித்துள்ளார். இதேபோல் கோவையில் மாயன் வீர கலைக்கூடம் நடத்திய மாநில அளவில் மாவட்டங்களுக்கு மத்தியிலான சிலம்பம் போட்டியில் முதலிடம் பெற்று விருதும், சான்றிதழும் பெற்றுள்ளார் மாணவி திவ்யதர்ஷினி.
மாணவியின் வெற்றிகள் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் குமார் கூறுகையில், படிப்பு, விளையாட்டு என்று எங்கள் பள்ளி மாணவ, மாணவிகள் தாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபித்து வருகின்றனர். அரசு பள்ளியா? என்று நினைத்த பெற்றோர்கள் கூட இன்று அரசு பள்ளியில்தான் தங்கள் குழந்தைகள் படிக்க வேண்டும் என்று நினைக்க வைக்கும் அளவிற்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது. படிப்போடு பல்வேறு விளையாட்டு போட்டிகளிலும் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பெற்று வரும் வெற்றிக்கனிதான் இதற்கு காரணம். எங்கள் பள்ளி மாணவ, மாணவிகளின் வெற்றிகளுக்கு ஆசிரிய, ஆசிரியைகள் உறுதுணையாக நிற்கிறோம்.
படிப்பிலும் கெட்டி என்று எங்கள் பள்ளி மாணவ, மாணவிகள் நிரூபித்து வருகின்றனர். இது எங்கள் பள்ளிக்கு பெரிய பெருமையை சேர்த்து வருகிறது. மாணவர்களின் உயர்வை கண்டு மன திருப்தியுடன் ஆசிரியப்பணியை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.