மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு, புதிதாக அமைக்கப்பட்ட 6 கேஎல் கொண்ட ஆக்சிஜன் பிளான்ட்  உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொரோனா வார்டில் நோயாளிகளிடம் சிகிச்சை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். 




அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் மா. சுப்பிரமணியன், “மூன்றாவது அலை ஏற்பட்டால்  குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருதப்படுவதால் பாதிப்பில் இருந்து தற்காத்துகொள்ள தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பொது மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான கொரோனா சிறப்பு மையம் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டதன் பேரில் தற்போது மயிலாடுதுறையில் குழந்தைகளுக்கான கொரோனா சிறப்பு மையம் 40 படுக்கைகள் உடனான 6 தீவிர சிகிச்சை படுக்கைகள் கொண்ட பிரத்யேக மையம் திறக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக மற்ற மாவட்டங்களில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட முதுகலை மருத்துவர்கள் கொரோனா தாக்கம் குறைந்ததால் தேவைப்படும் இடங்கள் மற்றும் காலி பணி இடங்களுக்கு  நியமிக்கப்பட்டு வருகிறார்கள். மாவட்டங்களுக்கு தேவையான மருத்துவர்களை மருத்துவக் கல்லூரி முதல்வர், மாவட்ட ஆட்சியர்கள் நேரடி நியமனம் செய்து வருகிறார்கள்” என்றார்.




மேலும் தொடர்ந்து பேசியவர்,  ”ஒரு கோடியே 16 லட்சம் தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது. 1 கோடியே 6 லட்சம் வரை பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. 6 லட்சத்து 20 ஆயிரம் கையிருப்பில் உள்ளது. தமிழகத்தில்  18 வயதைக் கடந்தவர்களுக்கான 2 டோஸ் தடுப்பூசி 11 கோடியை 36 லட்சம் போடப்படவேண்டும். தமிழ்நாட்டிற்கு 10.25 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகிறது” என்றார். 




”தற்போது கொரோனா ஆர்டிபிசிஆர் பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்தில் அறிவிக்கப்படுகிறது. மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்பது  முன்னாள் முதல்வர் கலைஞரின் கனவு அந்த அடிப்படையில் புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் மத்திய அரசு உதவியுடன் மருத்துவ கல்லூரி ஏற்படுத்தப்படும் என்றார். தற்போது உள்ள கொரோனாவிற்கு இந்த தடுப்பூசி சிறந்தது. ஒரு தடுப்பூசி போட்டால் 75 சதவிகிதம் பாதிப்பு தவிர்க்கப்படும் 2 தடுப்பூசி போடப்பட்டால் 95 சதவிகிதம் பாதிப்பில் இருந்து மீளலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனா வந்தால் அப்போது பார்த்துக்கொள்ளலாம்” என்றார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எங்கு சென்றாலும் தடுப்பூசி கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டிக்கு பதிலளித்த அமைச்சர், ”அவர் எங்கு சென்றாலும் அங்கே தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்” என்றார். இந்நிகழ்வில்  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன்,  சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் லலிதா, சட்டமன்ற உறுப்பினர்கள், நிவேதா.முருகன், ராஜகுமார், பன்னீர்செல்வம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.