கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியைச் சேர்ந்த மதியழகன் என்பவர் மயிலாடுதுறை மாவட்டம் கொண்டத்தூரில் 6.5 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து சவுடு மண் குவாரி நடத்த முயன்றுள்ளார். அப்போது அவரை மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் மற்றும் அவரைச் சார்ந்த சிலர் மிரட்டி மதியழகன் 85 லட்சம்  ரூபாய் பணம்  பெற்றுக்கொண்டதாக பத்திரத்தில் கையொப்பம் பெற்றுக்கொண்டதாக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த வாரம் புகார் அளித்தார். அப்போது, மதியழகன் சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா எடுத்துக்கட்டி சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த நாம் மக்கள் இயக்கத் தலைவர் வழக்கறிஞர் சங்கமித்ரன் உடன் வந்தார். 




இந்நிலையில், வழக்கறிஞர் சங்கமித்ரன் மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான பவுன்ராஜ்க்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்புவதாக அதிமுக பொறுப்பாளர்கள் மாவட்ட அவைத் தலைவர் பி.வி.பாரதி தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தனர். இந்த சூழலில், இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்த வழக்கறிஞர் சங்கமித்திரன், வழக்காடியின் சார்பாக ஆஜரான தன்மீது அவதூறு பரப்புவதாக பொய்க் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளதாகவும், தனக்கும், தனது குடும்பத்தாருக்கும் காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை மனு அளித்துள்ளார். 




பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்த போது, நில மோசடி வழக்கில் நாகப்பட்டினத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பதியப்பட்ட வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக பவுன்ராஜ் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதற்கான முதல் தகவல் அறிக்கையை (எப்ஐஆர்) நகலையும் வெளியிட்டார். மேலும் தனது உயிருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ்தான் காரணம் எனவும் தெரிவித்தார்.




தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை, தரங்கம்பாடி சுற்றுலா மையத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு. 


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம், பொறையார் அரசு மருத்துவமனை மற்றும் தரங்கம்பாடி கடற்கரையில் அமைந்துள்ள டேனிஷ் கோட்டை, கவர்னர் மாளிகை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து  மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் வளர்ச்சி பணிகள் திட்ட இயக்குனருமான அமுதவல்லி மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.  அப்போது அவர்களுடன் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர். 




முதலில் தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இ-சேவை மையம் மற்றும் பல்வேறு துறை சார்ந்த கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.  அப்போது தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு குடிநீர், கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முற்றிலும் இல்லாத நிலை உள்ளதாக தெரிவித்தனர். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார். பொறையார் அரசு மருத்துவமனையில் மருத்துவம், பரிசோதனை மையத்தை ஆய்வு செய்து, சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.  பொறையார் அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் இல்லாததும், போதிய மருந்துகள் கிடைப்பதில்லை, எனவும் அங்கும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து தரங்கம்பாடி கடற்கரையில் அமைந்துள்ள வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை மற்றும் கவர்னர் மாளிகையில் ஆய்வு செய்தனர்.