தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் தொடங்கிய நிலையில் முதன்முறையாக ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் விற்பனை செய்யப்பட்டது. 


காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் பிரதான பயிராக இருந்து வருகிறது. சம்பா, தாளடி, குறுவை என 3 போகங்களாக நெல் சாகுபடி நடைபெறும் நிலையில், மழைக்காலங்களில் சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டு விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் டெல்டா பகுதியில் பருத்தி சாகுபடி மீதான ஆர்வம் விவசாயிகள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது.


தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா திருக்கருகாவூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கோடை பயிராக பருத்தி அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கோடையில் நெல், உளுந்து பயிருக்கு மாற்றாக பருத்தி சாகுபடி செய்ய கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.


பருத்தி சாகுபடியில் அதிக லாபம் கிடைப்பதால் விவசாயிகள் கோடையில் பருத்தியை சாகுபடி செய்து பயனடைந்து வருகின்றனர். நடப்பு ஆண்டு பருத்தி சாகுபடி கடந்த ஆண்டை விட பாபநாசம் தாலுகாவில் அதிக அளவில் செய்யப்பட்டுள்ளது.


திருக்கருகாவூர், கரம்பத்தூர், நாகலூர், நிறைமதி, மேல செம்மங்குடி, தேவராயன் பேட்டை, வளத்தாமங்களம், புலிமங்களம், பொன்மான்மேய்ந்தநல்லூர், பண்டாரவாடை, ராஜகிரி மற்றும் கோபுராஜபுரம் உட்பட பல பகுதிகளில் பருத்தி சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு சாகுபடி செய்யப்படும் பருத்தியை விற்பனை செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.



 


தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் தொடங்கிய நிலையில் முதன்முறையாக ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் விற்பனை செய்யப்பட்டது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பருத்தியை கொள்முதல் செய்வதற்கு வியாபாரிகள் வருகை தந்தனர்.


தஞ்சாவூர் மாவட்டம்  பாபநாசத்தில் அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளுக்கான பருத்தி மறைமுக ஏலம் விற்பனை தொடங்கியது. இந்த விற்பனையை தொடர்ந்து பாபநாசம் சுற்றியுள்ள பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் தங்களது பருத்தியினை விற்பனை கூடத்திற்கு விற்பனைக்காக கொண்டு வந்தனர்.


பருத்தியை கொள்முதல் செய்வதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் விற்பனை கூட அலுவலகத்திற்கு வருகை புரிந்துள்ளனர்.  மேலும் அதிகாரிகள் கூறும்போது, தற்போது விவசாயிகள் 10ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்திருப்பதாகவும், பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் பருத்தியை கொள்முதல் செய்வதற்காக வருகை வந்துள்ளனர்.


தேசிய மின்னணு விவசாய வேளாண் சந்தை திட்டத்தின் அடிப்படையில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த பருத்திக்கு உண்டான பரிவர்த்தனை  ஆன்லைன் மூலம் ஒன்று அல்லது இரண்டு தினங்களில் நடத்தி முடிக்கப்படும்.  தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் விற்பனை முதன் முதலாக தற்போது தான் துவங்கப்பட்டுள்ளதாகவும், இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்த பருத்தியை அதிக விலைக்கு விற்பனை செய்து கொடுப்பதுதான் எங்களின் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.