தஞ்சாவூர்: இரண்டு கையிலும் சுழலுது சிலம்பம்... வாள் வீச்சில் தஞ்சை மாணவர் வாங்கி வந்ததோ தங்கம். அட ஆமாங்க புதுச்சேரியில் சர்வதேச அளவில் நடைபெற்ற வாள் வீச்சு போட்டியில் தங்கப்பதக்கத்தையும், இரட்டை சிலம்பத்தில் வெள்ளிப்பதக்கத்தையும் அசால்ட்டாக அள்ளி வந்துள்ளார் தஞ்சை மாணவர்.


தளராத தன்னம்பிக்கையில் சாதித்த மாணவர்


ஏதாவது ஒரு தனித்திறன் அனைவரிடமும் மறைந்துதான் இருக்கிறது. சூழ்நிலை, நேரம், வயதுக்கு ஏற்ப அவை வெளிப்படும் போதுதான் சாதனை என்ற இலக்கை எட்ட முடிகிறது. பிற சாதனையாளர்களை நம் பக்கம் திருப்ப முடிகிறது. புதியவை படைக்கும் போதுதான் திறன் வளரும். எதையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை பிறக்கும். வெற்றி என்பது எளிதானதல்ல. விடாத முயற்சியும், தளராத தன்னம்பிக்கையும் வார்ப்பு இரும்பு போல் இறுகி, வலுவாகும் போதுதான் வெற்றியின் சிகரம் நோக்கி நடை போட இயலும். தனித்திறன்கள் கூர்ந்து கவனித்தல், நினைவாற்றல் போன்றவற்றை வளர்க்கும். அதுபோல் சிறுவயதிலேயே சிலம்பம், வாள்வீச்சில் சகலகலா வல்லவராக திகழம் தஞ்சை மாணவர் பற்றி பார்ப்போம்.


சிலம்பம், வாள் வீச்சில் சிறந்த பயிற்சி


தஞ்சாவூர் கீழவாசல் பூமாலை ராவுத்தர் கோவில் தெருவை சேர்ந்த மாணவர் கோவர்த்தனன். இவர் தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். படிப்பு மட்டுமல்லாமல் விளையாட்டிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட இந்த சிறுவன் சிறுவயதிலிருந்தே சிலம்பம், வாள் வீச்சு உள்ளிட்ட தற்காப்பு கலைகளைக் கற்றுக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார்.


இதன் விளைவாக  4ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே  மாவட்டம்,மாநிலம், தேசிய அளவில், தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை பெற்றுள்ளார். இந்த நிலையில் பாரம்பரிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி சர்வதேச அளவில் புதுச்சேரியில் நடைபெற்றது. 


சர்வதேச போட்டியில் தங்கமும், வெள்ளியும்


இப்போட்டியில் 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் கோவர்த்தன், சப் ஜூனியர் ஒற்றை வாள் பிரிவில் தங்கப்பதக்கமும், சிலம்பத்தில் வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதுகுறித்து மாணவர் கோவர்த்தன் கூறுகையில், தொடர்ந்து நான் மேற்கொண்ட கடினமான பயிற்சியால் மட்டுமே என்னால் பரிசுகளை பெற முடிகிறது. மேலும் பல்வேறு தற்காப்புக் கலைகளை கற்று திறம்பட மாறுவேன் என்று தெரிவித்தார். 


தற்காப்பு கலைகள் கற்பதில் ஆர்வம்


மாணவரின் திறமைகள் குறித்து குறித்து பயிற்சியாளர் நிர்மலா கூறியதாவது: நான் ஒரு விவசாய குடும்பத்தை சார்ந்தவள். கீழவாசல் பகுதியில் சிலம்ப அகாடமியை நடத்தி வருகிறேன். என்னிடம் 150 மாணவர்கள் சிலம்ப பயிற்சியை  மேற்கொண்டு வருகிறார்கள்.  தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்வது எல்லோராலும் முடியும் என்றாலும், அதை எத்தனை பேர் ஆர்வத்துடன் செய்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.


அப்படிப் பார்த்த ஒரு மாணவன் தான் கோவர்த்தன். மூன்றாம் வகுப்பு படிக்கும் போது சிலம்பம் கற்றுக்கொள்ள  என்னிடம் சேர்ந்தார். ஆரம்பத்தில் அவர் கஷ்டப்பட்டாலும், போகப் போக இந்த கலையின் மேல் மாணவனுக்கு இயற்கையாகவே மிகுந்த ஆர்வம் இருப்பதை அறிந்தேன். அதன்படி தினமும் வகுப்புக்கு நேரம் தவறாமல் வந்துவிடுவார்.


கற்பூரம் போல் புரிந்து கொண்டு கற்றுக் கொண்டார்


சொல்லிக் கொடுக்கும் விஷயங்களை கற்பூரம் போல் புரிந்துகொண்டு அதனை செய்வார். முன்பை விட தற்போது சிலம்பம் சுற்றுவதிலும், வால் வீசுவதிலும் அவனது வயதிற்கு திறம் வாய்ந்துள்ளார். இதனாலேயே கோவர்த்தனால் தொடர்ந்து‌ மெடல்களைப் பெற முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.