தஞ்சாவூர்: சுயமரியாதையை இழக்காமல், மாநிலத்தின் தன்மையை கட்டிக் காக்கும் வகையில் துணைவேந்தர் நியமனம் தொடர்பான பணிகள் நடந்து வருகிறது என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தலைமையில், அனைத்துத் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் அமைச்சர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
31 துறை ரீயாக பணி முன்னேற்றம் குறித்து விளக்கம்
தற்போது 31 துறை ரீதியான ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. ஒவ்வொரு துறையும் விரிவாக தங்களுடைய பணி முன்னேற்றம் குறித்து எடுத்துரைத்தனர். இந்த கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளும் கோரிக்கைகளை முன்வைத்தபோது அதை அரசு துறையினர் நிறைவேற்றுவதாக தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் எதை செய்ய வேண்டும் என எண்ணுகிறாரோ, அதை அரசு அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் ரயில் பாதையின் இரு தண்டவாளங்கள் போல அதனை மக்களிடம் கொண்டு செல்ல உள்ளனர். தமிழக முதல்வரால் அறிவிக்கப்படும் அனைத்து திட்டங்களையும் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் மிகுந்த அக்கறையோடு எடுத்துச் செல்கிறார். அதன்படி பல்வேறு துறைகளில் தஞ்சாவூர் மாவட்டம் மாநில அளவில் பல்வேறு பரிசுகளை பெறக்கூடிய வகையில் செயல்பட்டு வருகிறது.
திட்டங்களை சிறப்பாக கொண்டு செல்ல ஆய்வுக்கூட்டம்
மேலும், பல திட்டங்களை சிறப்பாக கொண்டு செல்ல இந்த ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் வழங்கப்படும் மனுக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த மனுக்கள் மீது அரசு அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி குறைகளை தீர்க்க வேண்டும். இதற்காக முதல்வரின் சிறப்பு பிரிவான முதல்வரின் முகவரி என்ற பிரிவு செயல்பட்டு வருகிறது. எனவே பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து தீர்வு காணப்படும். அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இருப்பதால்தான் மனுக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. முக்கியமாக நீர்நிலைகள் மற்றும் புறம்போக்கு நிலங்களில் பட்டா போட்டு தர கோரும் மனுக்கள் குறித்து அவர்களிடமே விளக்கம் அளித்து அவ்வாறு செய்ய இயலாது என்றுதான் கூற இயலும். இதுபோன்ற மனுக்களுக்கு விளக்கம் அளித்து அவர்களுக்கு உரிய பதில் அளிக்கப்படும.
கவுரவ விரிவுரையாளர் திட்டம்
கல்லூரிகளில் பேராசிரியர் பற்றாக்குறையை இருப்பதை புரிந்து கொண்ட காரணத்தினால் தான், கவுரவ விரிவுரையாளர் திட்டத்தை முதல்வர் செயல்படுத்தினார். அதன் பிறகும் பற்றாக்குறை இருக்கும் பட்சத்தில், கூடிய விரைவில், விரிவுரையாளர்கள் நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. பேராசிரியர் காலிப்பணியிடங்கள் தொடர்பான குறைகள் அனைத்தும் விரைவில் தீர்வு காணப்படும். பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனத்தில் ஏற்பட்ட இடர்பாடுகள் குறித்து அனைவருக்கும் தெரியும். இதில் முதல்வர் தகுந்த கவனம் செலுத்தி வருகிறார்.
சுயமரியாதை இழக்காமல் துணைவேந்தர் நியமனப்பணி
சுயமரியாதை இழக்காமல், மாநிலத்தின் தன்மையை கட்டிக் காக்கும் வகையில் துணைவேந்தர் நியமனம் தொடர்பான பணிகள் நடந்து வருகிறது. எல்லாத் துறைகளையும் விட தமிழக நிதி நிலை அறிக்கையில் உயர் கல்வித் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுகிறது. அடுத்தடுத்து ஆண்டுகளில் நிதி பற்றாக்குறையை குறைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.